“ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது” அரசின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளதே? - மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து
“ஒரு கையில் கபசுர குடிநீர், மறு கையில் மது என அரசின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளதே?” என்று மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.
மதுரை,
மதுரையை சேர்ந்த போனிபாஸ், மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்திருந்த மனுவில், “தமிழகத்தில் கொரோனா நோய்த்தொற்று பரவுவதை தடுக்கும் நடவடிக்கையாக கடந்த மார்ச் 25-ந் தேதி முதல் தொடர்ச்சியாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்நிலையில் கடந்த 7-ந் தேதி டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டன. டாஸ்மாக் கடைகளை திறந்ததால் நோய்த்தொற்று பரவல் சமூக பரவல் நிலையை அடையுமோ என்ற அச்சம் ஏற்பட்டது. மது அருந்துதல் நோய் எதிர்ப்பாற்றலை குறைக்கும். எனவே மதுவை பயன்படுத்துவோர் எளிதாக கொரோனா நோய்த்தொற்றால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது. ஆகவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்து உத்தரவிட வேண்டும்” என கூறியிருந்தார்.
இந்த வழக்கு நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், புகழேந்தி ஆகியோர் முன்பு “வீடியோ கான்பரன்சிங்” மூலம் விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு வக்கீல் ஆஜராகி, “ஏற்கனவே சென்னை ஐகோர்ட்டு டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதித்துள்ளது. அதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது” என்றார்.
அதற்கு மனுதாரர் தரப்பில் ஆஜரான மூத்த வக்கீல் வீராகதிரவன், “டாஸ்மாக் கடைகளில் சமூக இடைவெளி பின்பற்றப்படாததால் அவற்றை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. ஆனால், மதுவை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் அறிவுறுத்தி உள்ளது. மதுப்பழக்கம் நோய் எதிர்ப்பு சக்தியை குறைப்பதால், கொரோனா எளிதாக தாக்கும் வாய்ப்புள்ளது. எனவே மது விற்பனைக்கு தடை விதிக்க வேண்டும் என்பதே மனுதாரரின் கோரிக்கை.
மது அருந்தி விட்டு கொரோனாவால் பாதிக்கப்படும் நபர்களால் அவரின் குடும்பத்தினரும், அவர் வசிக்கும் பகுதியினரும் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான வன்முறைகள், குற்ற சம்பவங்கள் அதிகரிக்கின்றன. கடந்த 7-ந் தேதி திறக்கப்பட்ட டாஸ்மாக் கடைகளில் மது வாங்கி அருந்திய பலர் பல்வேறு குற்ற சம்பவங்களில் ஈடுபட்டுள்ளனர். இதனால் தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். இந்த விஷயத்தில் தமிழக அரசு கர்நாடகம், ஆந்திர மாநிலங்களை ஒப்பிடுகிறது. ஆனால் கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள கேரளா, புதுச்சேரி மாநிலங்களோடுதான் தமிழகத்தை ஒப்பிட வேண்டும். எனவே இவற்றை கருத்தில் கொண்டு தமிழகத்தில் டாஸ்மாக் கடைகளை திறக்க தடை விதிக்க வேண்டும்” என வாதிட்டார்.
அதற்கு அரசு வக்கீல் ஆஜராகி, “டாஸ்மாக் கடைகள் திறக்கப்பட்டபோது, சமூக இடைவெளியை கடைபிடிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. மீறப்பட்ட இடங்களிலும் உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டது. இது தொடர்பான மேல்முறையீட்டு வழக்கு நிலுவையில் இருப்பதால் இந்த வழக்கில் எவ்வித உத்தரவும் பிறப்பிக்க தேவையில்லை” என்றார்.
இதையடுத்து நீதிபதிகள், “அரசு ஒரு கையில் நோய் எதிர்ப்பாற்றலை அதிகரிக்க கபசுர குடிநீரையும், மறு கையில் உடலை பாதிக்கும் மதுவையும் வைத்திருக்கிறது. அரசின் நடவடிக்கை முரண்பாடாக உள்ளதே?” என கருத்து தெரிவித்தனர்.
பின்னர், நீதிபதிகள் டாஸ்மாக் கடைகள் செயல்பட சென்னை ஐகோர்ட்டு பிறப்பித்த தடை உத்தரவு இந்த வழக்கிற்கும் பொருந்தும். மேலும், இந்த வழக்கை சென்னை ஐகோர்ட்டுக்கு மாற்றுவதாக நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Related Tags :
Next Story