அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 36 பேர் வீடு திரும்பினர்


அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்ற 36 பேர் வீடு திரும்பினர்
x
தினத்தந்தி 12 May 2020 12:07 PM IST (Updated: 12 May 2020 12:19 PM IST)
t-max-icont-min-icon

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் வீடு திரும்பினர்.

அரியலூர், 

அரியலூர் அரசு மருத்துவமனையில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த 36 பேர் வீடு திரும்பினர்.

36 பேர் ‘டிஸ்சார்ஜ்’

அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட 308 பேர் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இதில் பெரும்பாலானோர் சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் இருந்து திரும்பியவர்கள் ஆவார்கள். இதில் பாதிக்கப்பட்ட 308 பேரில் ஏற்கனவே திருச்சி அரசு மருத்துவமனையிலிருந்து 11 பேரும், அரியலூர் அரசு மருத்துவமனையில் ஒருவரும் என மொத்தம் 12 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இந்நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் 24 பேர், 108 ஆம்புலன்சு டிரைவர் உள்பட மொத்தம் 36 பேர் பூரண குணமடைந்ததால், அவர்களை மருத்துவமனையில் இருந்து ‘டிஸ்சார்ஜ்’ செய்து ஆம்புலன்சு மூலம் அவர்களது வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டு, தனிமைப்படுத்தப் பட்டுள்ளனர். முன்னதாக அவர்களுக்கு மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் பழங்கள் வழங்கி வழியனுப்பி வைக்கப்பட்டது.

எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்...

மேலும் தற்போது அரியலூர் மாவட்டத்தில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் 260 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் விதமாக தனிமைப்படுத்தப்பட்டு, மருத்துவக்குழுவின் கண்காணிப்பில் உள்ள 12 முகாம்களை கலெக்டர் ரத்னா பார்வையிட்டு கூறுகையில், முகாம்களில் எந்தவித அறிகுறியும் இன்றி தங்க வைக்கப்பட்டுள்ள 178 பேருக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் உணவுகளும், கபசூரண குடிநீரும் வழங்கப்பட்டு வருகிறது. மருத்துவக் குழுவினர்களும் கண்காணித்து வருகின்றனர். மேலும் விளாங்குடி அண்ணா பொறியியல் பல்கலைக்கழகத்தில் மராட்டியத்தில் இருந்து சொந்த ஊருக்கு வந்த 35 நபர்களை தனிமைப்படுத்தி தங்க வைக்கப்பட்டுள்ளனர் என்றார்.

Next Story