ராஜபாளையம் அருகே, ரேஷன் பொருட்களை வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்


ராஜபாளையம் அருகே, ரேஷன் பொருட்களை வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 12 May 2020 12:19 PM IST (Updated: 12 May 2020 12:19 PM IST)
t-max-icont-min-icon

ராஜபாளையம் அருகே சோமையாபுரத்தில் கடந்த 6 நாட்களாக பூட்டப்பட்டுள்ள ரேஷன் கடையை திறந்து நிவாரண பொருட்கள் வழங்கக்கோரி பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

ராஜபாளையம்,

ராஜபாளையம் முடங்கியாறு சாலையில் வட்டாட்சியர் அலுவலகம் எதிரே உள்ள சோமையாபுரம் ரேஷன் கடையில் 700-க்கும் மேற்பட்ட குடும்ப அட்டைதாரர்கள் உறுப்பினர்களாக உள்ளனர். 4 நாட்களுக்கு ஒரு முறை கடை திறக்கப்பட்டு ரேஷன் பொருட்கள் வழங்கப்படுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 6-ந்தேதி கடை திறக்கப்பட்டு, பெண் விற்பனையாளர் மூலம் நிவாரண பொருட்கள் வினியோகம் செய்யப்பட்டது. அப்போது அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பொருட்கள் வாங்க நின்றிருந்தவர்களிடம் தகராறில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து விற்பனையாளர் கடையை மூடி சென்று விட்டார். அதன் பின்னர் இன்றுவரை கடை திறக்கப்படவில்லை.

இதுதொடர்பாக குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகளிடம் அப்பகுதி மக்கள் முறையிட்டு மனு கொடுத்தும் கடை திறக்க நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனைதொடர்ந்து அப்பகுதி மக்கள் 50-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறும்போது, ஊரடங்கால் இப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் வேலையின்றி தவித்து வரும் நிலையில் ரேஷன் கடையில் அரசு அறிவித்த நிவாரணம் கூட இன்னும் வழங்கப்படவில்லை. இதனால் குடும்பத்தினருடன் மிகவும் வறுமையில் இருந்து வருகிறோம். எனவே ரேஷன் கடையை திறந்து நிவாரண பொருட்கள் வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டனர். சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற போராட்டத்தால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story