ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
அரசு ரூ.7,500 நிவாரணம் வழங்கக்கோரி ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
தளவாய்புரம்,
விருதுநகர் மாவட்டத்தில் ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் 5 போக்குவரத்து கழக பணிமனைகள் உள்ளிட்ட 25 இடங்களில் 4 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினர். விருதுநகர் போக்குவரத்து கழக பணிமனை முன்பு பாண்டியன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் காதர்மொய்தீன், சக்கணன் உள்ளிட்ட நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.பின்னர் கலெக்டரிடம் மனு கொடுக்கப்பட்டது.அதில் அனைத்து தொழிலாளர்களுக்கும் நிவாரண நிதியும் அத்தியாவசிய பொருட்களும் விரைந்து வழங்க வேண்டும்.ரூ.7500 வீதம் நிவாரண தொகை வழங்க வேண்டும்.பொதுமுடக்க காலத்திற்கு முழு சம்பளம் வழங்க வேண்டும். வேலை நேரத்தை அதிகரிக்கும் நடவடிக்கையை தவிர்க்க வேண்டும்.புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சொந்த ஊர் திரும்ப ஏற்பாடு செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டு இருந்தது.
சேத்தூர் இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தலைமையிலும், செட்டியார்பட்டி இந்திய கம்யூனிஸ்டு கட்சி அலுவலகம் முன்பு ஒன்றிய செயலாளர் வீராச்சாமி தலைமையிலும், நலவாரியத்தில் பதிவு செய்த அனைத்து தொழிலாளர்களுக்கும் ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தொடர்ந்து சேத்தூரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் சேத்தூர் வருவாய் ஆய்வாளரிடமும், செட்டியார்பட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கிராம நிர்வாக அலுவலரிடமும் கோரிக்கை மனுக்கள் கொடுத்தனர்.
இதேபோல் ஆலங்குளத்தில் ஏ.ஐ.டி.யூ.சி தொழிற்சங்கத்தினர், வெம்பக்கோட்டை இந்திய கம்யூனிஸ்டு கட்சி ஒன்றிய செயலாளர் நடராஜன் தலைமையில், கட்சி அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் நலவாரியத்தில் பதிவு செய்த மற்றும் பதிவு செய்யாத கட்டுமான தொழிலாளர்களுக்கு ரூ.7,500 நிவாரணம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
வத்திராயிருப்பு வருவாய் அலுவலகம் முன்பு ஏ.ஐ.டி.யூ.சி. தொழிற்சங்கத்தினர் சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ராமசாமி, கோவிந்தன் மற்றும் கட்டுமான தொழிலாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்துகொண்டனர். இதேபோல் மகாராஜபுரம் மற்றும் கோட்டையூர் வருவாய் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
Related Tags :
Next Story