ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: தேனி மாவட்டத்தில் மீண்டும் கடைகள் திறப்பு


ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: தேனி மாவட்டத்தில் மீண்டும் கடைகள் திறப்பு
x
தினத்தந்தி 12 May 2020 12:54 PM IST (Updated: 12 May 2020 12:54 PM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு தேனி மாவட்டத்தில் நேற்று கடைகள் மீண்டும் திறக்கப்பட்டன.

தேனி,

கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதால் கடந்த மார்ச் மாதம் 24-ந்தேதியில் இருந்து கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டு இருந்தன. அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகள் மட்டும் செயல்பட்டு வந்தன. இந்நிலையில் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்ட பகுதியில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தூரம் வரை நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டு, அப்பகுதிகளில் அத்தியாவசிய பொருட்கள் விற்பனை கடைகளும் மூடப்பட்டன.

இதனால் மக்கள் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு பரிதவித்தனர். இதையடுத்து ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு மீண்டும் கடைகளை திறக்கலாம் என்று தமிழக அரசு அனுமதி அளித்தது. நோய் கட்டுப்பாட்டு பகுதிகளின் பரப்பளவும் குறைக்கப்பட்டது. பாதிக்கப்பட்டவர்களின் வீடுகள் அமைந்துள்ள குடியிருப்பு பகுதிகளை மட்டும் நோய் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவித்து, அப்பகுதிகளில் மட்டும் கட்டுப்பாடுகள் எதுவும் தளர்த்தப்படவில்லை.

தேனி மாவட்டத்தில் தேனி, பெரியகுளம், கம்பம், சின்னமனூர், போடி போன்ற பகுதிகள் உள்பட மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் நேற்று கடைகள் திறக்கப்பட்டன. மளிகை கடைகள், மின்சாதன பொருட்கள் விற்பனை கடைகள், பல்பொருள் அங்காடிகள், வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை கடைகள், ஜவுளிக்கடைகள், நகைக்கடைகள், செல்போன் கடைகள், மின்சாதன மற்றும் வாகன உதிரி பாகங்கள் விற்பனை கடைகள் உள்பட அனைத்து விதமான கடைகளும் திறக்கப்பட்டன. பேக்கரிகள், இனிப்புக் கடைகளும் திறந்து இருந்தன. வாகன பழுதுபார்ப்பு கடைகளும் திறக்கப்பட்டன.

கடைகளுக்கு வாடிக்கையாளர்களை கை கழுவிவிட்டு உள்ளே வருமாறு பல்வேறு கடைக்காரர்களும் அறிவுறுத்தினர். மேலும் சில கடைகளில் வாடிக்கையாளர்களுக்கு முக கவசம் இலவசமாக வழங்கப்பட்டது. சில கடைகளில் வாடிக்கையாளர்கள் நுழையும் முன்பு கிருமி நாசினி திரவம் கொண்டு கைகளை சுத்தம் செய்த பின்னரே கடைக்குள் அனுமதிக்கப்பட்டனர். ஒருசில வணிக நிறுவனங்கள் தங்களின் வாடிக்கையாளர்களுக்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளதா? என்பதை ‘தெர்மல் ஸ்கேனர்’ கருவி மூலம் பரிசோதித்தனர். அந்த வகையில் பாதுகாப்பான முறையில் வாடிக்கையாளர்களை வியாபாரிகள் வரவேற்றனர்.

பெரிய அளவிலான ஜவுளிக்கடைகள் மட்டும் திறக்கப்படவில்லை. அதுபோல் ஓட்டல்கள், டீக்கடைகளில் பார்சல் மட்டுமே அனுமதி என்பதால் பெரும்பாலான கடைகள் பூட்டியே கிடந்தன. ஒருசில ஓட்டல்கள், டீக்கடைகள் மட்டுமே திறந்து இருந்தன.

கடைகள் திறக்கப்பட்டதால் கடை வீதிகளில் மக்கள் கூட்டம் அதிக அளவில் காணப்பட்டது. மக்களின் நடமாட்டத்தால் இயல்பு நிலை திரும்பியது போல் காட்சி அளித்தது. சாலைகளில் மக்கள் நடமாட்டம் மற்றும் வாகன போக்குவரத்து அதிக அளவில் இருந்தது.

கம்பம் நகரில் கடைகள் திறக்கப்பட்ட நிலையில் நகர் மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து ஏராளமான மக்கள் கார், மோட்டார் சைக்கிள்களில் கம்பத்துக்கு வந்தனர். இதனால், நகரில் பல்வேறு இடங்களில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.

Next Story