ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளுக்கு படையெடுத்த சென்னைவாசிகள்
ஊத்துக்கோட்டை எல்லையில் உள்ள ஆந்திர மாநில மதுக்கடைகளுக்கு நேற்று சென்னைவாசிகள் படையெடுத்தனர். இதனால் அப்பகுதி விழாக்காலம் போல் காட்சி அளித்தது.
ஊத்துக்கோட்டை,
ஊத்துக்கோட்டை நகர எல்லையில் ஆந்திரா மாநிலத்திற்குட்பட்ட தாசுகுப்பம் கிராமத்தில் உள்ள 2 மதுக்கடைகளில் குடிமகன்கள் கூட்டம் அலைமோதி வருகிறது. இங்கு ஆந்திரா மாநிலத்தினர் மட்டுமின்றி திருவள்ளூர் மாவட்டத்தை சேர்ந்த குடிமகன்களும் நீண்ட வரிசையில் நின்று உற்சாகமாக மது பாட்டில் களை வாங்கி வருகின்றனர்.
இந்நிலையில் நேற்று சென்னையை சேர்ந்த தேனாம்பேட்டை, குரோம்பேட்டை, வண்ணாரப்பேட்டை, அண்ணாநகர், வடபழனி, கோயம்பேடு, அடையாறு, மந்தைவெளி, திருமங்கலம் மற்றும் பல பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கான குடிமகன்கள் மோட்டார் சைக்கிள்களில் ஊத்துக்கோட்டைக்கு படையெடுத்தனர்.
ஆந்திராவில் உள்ள தாசுகுப்பம் பகுதிக்கு முன்பாக ஊத்துக்கோட்டை போலீசார் சார்பாக அண்ணாசிலை அருகே தடுப்பு ஏற்படுத்தி இருந்தனர்.
மழையிலும் ஆர்வம்
இந்த நிலையில், இரு சக்கர வாகனங்களை சாலையின் ஓரத்தில் நிறுத்திய குடிமகன்கள் தாசுகுப்பத்தில் உள்ள மதுக்கடைகளுக்கு நடந்தே சென்றனர். பின்னர் அங்கு, நீண்ட வரிசையில் நின்ற அவர்கள் சுட்டெரிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமலும் மது பாட்டில்கள் வாங்கி சென்றனர்.
இதற்கிடையே நேற்று மதியம் 2 மணியளவில் திடீரென பலத்த மழை பெய்த நிலையிலும், நனைந்தபடி குடிமகன்கள் போட்டி போட்டு மதுபாட்டில்களை வாங்கி செல்வதில் ஆர்வம் காட்டினர்.
குடிமகன்கள் நிரம்பி வழிந்ததால், ஊத்துக்கோட்டை சத்திவேடு ரோடு விழா காலம்போல் காட்சி அளித்தது.
Related Tags :
Next Story