மராட்டிய மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 550 பேர் சிக்கி தவிப்பு


மராட்டிய மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 550 பேர் சிக்கி தவிப்பு
x
தினத்தந்தி 12 May 2020 10:25 PM GMT (Updated: 12 May 2020 10:25 PM GMT)

மராட்டிய மாநிலத்தில் கூலி வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த 550 பேர் அங்கு சிக்கி தவித்து வருகின்றனர். அவர்கள் பசியும், பட்டினியுமாக இருப்பதாக கண்ணீர் மல்க கூறினர்.

விழுப்புரம்,

நாடு முழுவதும் கொரோனா வைரஸ் நோய் பரவலை தடுக்கும் வகையில் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்து வருகிறது. இந்த ஊரடங்கால் ஏழை, எளிய மக்கள், கூலித்தொழிலாளர்கள் என அனைத்து தரப்பினரும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் இந்தியாவின் பல்வேறு வெளிமாநிலங்களுக்கு வேலைக்கு சென்ற தமிழகத்தை சேர்ந்த பலர், சொந்த ஊருக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவ்வாறு புலம்பெயர்ந்த தொழிலாளர்களை அவரவர் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் மத்திய, மாநில அரசுகள் ஈடுபட்டு வருகிறது.

550 பேர் தவிப்பு

இந்நிலையில் மராட்டிய மாநிலம் ரத்தினகிரி மாவட்டம் கொக்கன் நகர் தாலுகாவில் தமிழகத்தை சேர்ந்த சுமார் 550 பேர், தங்களது சொந்த ஊருக்கு திரும்ப வழியில்லாமல் பரிதவித்து வருகின்றனர். இதுகுறித்து அங்கு தங்கியுள்ள விழுப்புரம் மாவட்டம் செஞ்சி பகுதியை சேர்ந்த சில தொழிலாளர்கள் கூறியதாவது:-

நாங்கள் மராட்டிய மாநிலம் கொக்கன்நகர் பகுதியில் கூலி வேலைக்காக வந்தோம். இங்கு விழுப்புரம் மாவட்டம் மட்டுமின்றி சேலம், ராணிப்பேட்டை, பெரம்பலூர், திருநெல்வேலி, ராமநாதபுரம், சென்னை ஆகிய இடங்களை சேர்ந்த 550 பேர் உள்ளோம்.

பசியும், பட்டினியுமாக

ஊரடங்கால் கடந்த 50 நாட்களுக்கும் மேலாக இங்குள்ள பூங்காவில் தான் தங்கியுள்ளோம். ஆரம்பத்தில் இங்குள்ள தன்னார்வலர்கள் மூலம் எங்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டது. பின்னர் அதுவும் வழங்கப்படவில்லை. எங்களை தமிழ்நாட்டிற்கு அனுப்ப நடவடிக்கை எடுக்குமாறு ரத்தினகிரி மாவட்ட கலெக்டரை சந்தித்து முறையிட்டோம். அதற்கு தமிழக அரசு முறைப்படி வேண்டுகோள் வைத்தால் அதற்கான உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் கூறினார். நாங்களும் எங்களுக்கு தெரிந்த அரசியல் தலைவர்கள், அதிகாரிகளுக்கு எங்களை பற்றிய விவரங்களை வாட்ஸ்-அப் மூலம் அனுப்பியுள்ளோம். ஆனால் இதுவரையிலும் எங்களை தமிழ்நாட்டிற்கு அழைத்து வர எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஒவ்வொரு நாளும் நாங்கள் மிகுந்த அச்சத்துடன் வாழ்ந்து வருவதோடு மட்டுமின்றி தற்போது பசியும், பட்டினியுமாக தவித்து வருகிறோம். எனவே தமிழக அரசு, மராட்டிய மாநில அரசுக்கு வேண்டுகோள் வைத்து எங்களை அழைத்துச்செல்ல விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர்கள் கண்ணீர்மல்க கூறினர்.

Next Story