ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திறக்கப்பட்ட கடைகளில் பழுது நீக்குவதற்காக குவிந்த மருந்து தெளிப்பான்கள்


ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் திறக்கப்பட்ட கடைகளில் பழுது நீக்குவதற்காக குவிந்த மருந்து தெளிப்பான்கள்
x
தினத்தந்தி 13 May 2020 4:02 AM IST (Updated: 13 May 2020 4:02 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதையொட்டி பழுது நீக்குவதற்காக மருந்து தெளிப்பான்கள்(ஸ்பிரேயர்கள்) வந்து குவிந்தன.

தஞ்சாவூர், 

ஊரடங்கு தளர்வுக்கு பிறகு கடைகள் திறக்கப்பட்டதையொட்டி பழுது நீக்குவதற்காக மருந்து தெளிப்பான்கள்(ஸ்பிரேயர்கள்) வந்து குவிந்தன.

நெற்களஞ்சியம்

தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இங்கு குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். இது தவிர கோடை நெல் சாகுபடியும் நடைபெறும். தஞ்சை மாவட்டத்தில் தற்போது கோடை நெல் அறுவடை நடந்து வருகிறது. அதேநேரத்தில் குறுவை சாகுபடிக்கான ஆயத்த பணிகளிலும் விவசாயிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

தஞ்சை மாவட்டத்தில் நெல் தவிர கரும்பு, உளுந்து, எள், மக்காச்சோளம், பச்சைபயறு, பூக்கள், வெள்ளரிக்காய், பரங்கிக்காய், தர்பூசணி, வெற்றிலை, வாழை உள்ளிட்டவைகளும் சாகுபடி செய்து வருகின்றன.

4½ லட்சம் ஏக்கர் பாசனம்

தஞ்சை மாவட்டத்தின் மொத்த பாசன பகுதி 4½ லட்சம் ஏக்கர் ஆகும். விவசாயிகள், தங்களுக்கு தேவையான விவசாய உபகரணங்களை தாங்களே சொந்தமாக வாங்கி வைத்து விவசாய பணிகளில் ஈடுபட்டு வருகிறார்கள். மருந்து தெளிப்பான்கள் (ஸ்பிரேயர்) உள்ளிட்ட விவசாய கருவிகள் வாடகைக்கும் விடப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் ஊரடங்கு உத்தரவு கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி அமல்படுத்தப்பட்டது. வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ள இந்த ஊரடங்கு உத்தரவின் காரணமாக அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டன. மக்களுக்கு தேவையான அத்தியாவசிய கடைகளான மளிகை, மருந்து கடைகள், காய்கறி கடைகள், இறைச்சி கடைகள் ஆகியவை மட்டும் திறக்கப்பட்டு இருந்தன.

விவசாய பணிக்கு விலக்கு

நாளடைவில் விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெறுவதற்காக தளர்வு அளிக்கப்பட்டது. அதன்படி உரம் மற்றும் பூச்சிக்கொல்லி, களைக்கொல்லி, விதைகள் போன்றவை வாங்குவதற்காக உரக்கடைகள் மட்டும் திறக்கப்பட்டன. இந்த உரக்கடைகளும் காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரை திறக்கப்பட்டன. இது தவிர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடமாடும் உர விற்பனை நிலையங்களும் செயல்படுத்தப்பட்டன.

விவசாயத்துக்கு ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டாலும் பயிர்களில் தாக்கிய பூச்சிகளை அளிப்பதற்கான மருந்து தெளிப்பான்கள் பழுதாகின. கடைகள் அடைக்கப்பட்டு இருந்ததால் இவற்றை சரி செய்ய முடியாமல் விவசாயிகள் கடும் அவதிக்குள்ளாகினர். பெரிய விவசாயிகள் புதிதாக மருந்து தெளிக்கும் தெளிப்பான்கள் வாங்கினர். ஆனால் சிறிய விவசாயிகள் தங்களால் சொந்தமாக வாங்க முடியாததால் வாடகைக்கு எடுத்து பயன்படுத்தி வந்தனர்.

குவிந்த மருந்து தெளிப்பான்கள்

இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி கடந்த 11-ந் தேதி பிறப்பிக்கப்பட்ட தளர்வில் 34 வகையான கடைகள் திறக்க அரசு அனுமதி அளித்தது. இதையடுத்து நேற்று முன்தினம் பல்வேறு வகையான கடைகள் திறக்கப்பட்டன. மருந்து தெளிப்பான்களை பழுதுபார்க்கும் கடைகளும் திறக்கப்பட்டன.

இதையடுத்து பழுதான தெளிப்பான்களை சரி செய்வதற்காக விவசாயிகள் எடுத்து வந்த வண்ணம் இருந்தனர். தஞ்சை கொடிமரத்து மூலையில் உள்ள ஒரு கடைக்கு நேற்று முன்தினம் காலையிலேயே 20-க்கும் மேற்பட்ட தெளிப்பான்களை விவசாயிகள் பழுது நீக்குவதற்காக எடுத்து வந்தனர். அவைகள் உடனுக்குடன் பழுது நீக்கி வழங்கப்பட்டன.

காலதாமதம்

இது குறித்து விவசாயிகள் கூறுகையில், “ஊரடங்கின்போது மருந்து தெளிப்பான்கள் பழுது அடைந்ததால் அதை சரி செய்வதற்கு கடைகள் இல்லாததால் அவதிக்குள்ளாகினோம். இதனால் மருந்து தெளிப்பதற்கு காலதாமதம் ஏற்பட்டது. இதனால் மற்ற விவசாயிகளிடம் இரவல் வாங்கி மருந்து தெளித்தோம். வாடகைக்கு கொடுக்கும் இடங்களிலும் வாடகைக்கு எடுத்து மருந்து தெளித்து வந்தோம். தற்போது கடைகள் திறக்கப்பட்டுள்ளதால் முதலில் இதனை பழுது பார்ப்போம் என்று எடுத்து வந்துள்ளோம்” என்றனர்.

Next Story