சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் செவிலியர் தின கொண்டாட்டம்


சென்னை அரசு ஆஸ்பத்திரிகளில் செவிலியர் தின கொண்டாட்டம்
x
தினத்தந்தி 13 May 2020 4:05 AM IST (Updated: 13 May 2020 4:07 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று செவிலியர் தினம் கொண்டாடப்பட்டது.

சென்னை, 

செவிலியர்களின் அன்னையாக திகழ்ந்த இங்கிலாந்து நாட்டை சேர்ந்த ‘பிளாரன்ஸ் நைட்டிங்கேலி’ன் பிறந்தநாளான மே 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இவர் 1820-ம் ஆண்டு மே 12-ந் தேதி பிறந்தார்.

‘பிளாரன்ஸ் நைட்டிங்கேலின்’ 200-வது பிறந்த நாளையொட்டி நேற்று கொண்டாடப்பட்ட சர்வதேச செவிலியர் தினமானது மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது. காரணம் உலகமே கொரோனா என்னும் கண்ணுக்கு தெரியாத வைரஸ் கிருமியுடன் போராடி வரு கிறது. இந்த போரில் நேரடியாக களத்தில் இறங்கி கொரோனா வைரசுக்கு எதிராக போர் புரிபவர்கள் செவிலியர்கள் தான்.

காவல் தெய்வங்கள்

இவர்கள் தான் கொரோனா நோயாளிகளை 24 மணி நேரமும் கண்ணும் கருத்துமாக கண்காணிக்கும் காவல் தெய்வங்களாக திகழ்கிறார்கள். எனவே, இந்த ஆண்டு கொண்டாடப்படும் சர்வதேச செவிலியர் தினம் மக்கள் மனதிலும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது என்றால் அது மிகை அல்ல.

செவிலியர் தினம் சென்னையில் உள்ள அரசு ஆஸ்பத்திரிகளில் நேற்று கொண்டாடப்பட்டது. சென்னை ராஜீவ்காந்தி அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் ஜெயந்தி தலைமையில் கொண்டாடப்பட்டது.

உறுதிமொழி எடுத்தனர்

அப்போது, செவிலியர்கள் கைகளில் மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி ஏற்றனர். டீன் டாக்டர் ஜெயந்தி செவிலியர் உறுதிமொழியை கூற அனைத்து செவிலியர்களும் அதை திருப்பி கூறி, நெஞ்சுக்கு நேர் கையை நீட்டி கூறி உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். அதைத் தொடர்ந்து அனைத்து செவிலியர்களுக் கும் இனிப்பு வழங்கப்பட்டது.

இதே போன்று சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் நாராயணபாபு தலைமையிலும், கீழ்ப்பாக்கம் அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் வசந்தாமணி தலைமையிலும், ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் டீன் டாக்டர் பாலாஜி தலைமையிலும் செவிலியர் தினம் கொண்டாடப்பட்டு, செவிலியர் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.


Next Story