சில்லரை விற்பனை கிடையாது என்பதால் திருமழிசை சந்தையில் காய்கறி வாங்க முடியாமல் பொதுமக்கள் ஏமாற்றம்
சில்லரை விற்பனை கிடையாது என்று தெரியாமல் திருமழிசை காய்கறி மார்க்கெட்டுக்கு காய்கறி வாங்க வந்து, பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச்செல்கிறார்கள்.
சென்னை,
கொரோனா நோயை பரப்பும் கேந்திரமாக மாறியதால் கோயம்பேடு மொத்த மார்க்கெட் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்டது. இதையடுத்து கோயம்பேடு மொத்த மார்க்கெட் வளாகத்தில் செயல்பட்டு வந்த பழம் மற்றும் பூ மார்க்கெட் மாதவரம் பஸ் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. இதேபோல காய்கறி மொத்த மார்க்கெட் திருமழிசைக்கு தற்காலிகமாக மாற்றம் செய்யப்பட்டது.
திருமழிசை சந்தையில் நேற்று முன்தினம் முதல் காய்கறி விற்பனை நடந்து வருகிறது. நள்ளிரவு 12 மணி முதல் காலை 8 மணி வரை சந்தையில் விற்பனை நடைபெறுகிறது. சில்லரை வியாபாரத்துக்கு அனுமதி இல்லை என்பதால், காய்கறிகளை மொத்தமாக மூட்டை, மூட்டைகளாக மட்டுமே வாங்க முடியும்.
ஏமாற்றம்
திருவேற்காடு, பூந்தமல்லி, திருநின்றவூர் மற்றும் சென்னையின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள் ஏராளமானோர் சில்லரையாக காய்கறி வாங்க மோட்டார் சைக்கிள், கார்களில் திருமழிசை சந்தைக்கு வந்த வண்ணம் இருக்கிறார்கள். ஆனால் இப்படி வருபவர்களுக்கு இறுதியில் ஏமாற்றமே மிஞ்சி வருகிறது.
அதாவது மொத்த வியாபாரத்துக்கு மட்டுமே அனுமதி என்பதால், மார்க்கெட்டின் நுழைவுவாயிலில் நிற்கும் போலீசார் சில்லரையாக காய்கறி வாங்க வருபவர்களை திருப்பி அனுப்பி வருகிறார்கள். அவர்களும், வெகுதொலைவில் இருந்து குறைவான விலைக்கு காய்கறி வாங்கலாம் என்று வந்துவிட்டு, ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறார்கள்.
சராசரியாக 500 பேர் வருகிறார்கள்
இதுகுறித்து சந்தை நுழைவு வாயிலில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வரும் போலீசார் கூறுகையில், சாக்குப் பை, துணிப் பைகளை எடுத்துக்கொண்டு மோட்டார் சைக்கிள் மற்றும் கார்களில் தினந்தோறும் சில்லரையாக காய்கறி வாங்குவதற்காக ஒரு நாளைக்கு சராசரியாக 500-க்கும் மேற்பட்டோர் வருகின்றனர்.
அவர்களுக்கு உள்ளே செல்ல அனுமதி இல்லை என்பதால், நுழைவாயிலிலேயே மடக்கி திருப்பி அனுப்பி வருகிறோம். காய்கறி சில்லரை விற்பனை கிடையாது என்று அரசு அறிவித்தப்போதிலும் அதனை அறிந்துகொள்ளாமல், மொத்த மார்க்கெட்டில் குறைவான விலைக்கு வாங்கிவிடலாம் என்று ஏராளமானோர் படையெடுத்து வருகின்றனர் என்றனர்.
Related Tags :
Next Story