ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பட்டறைகள் திறக்கப்பட்டதால் மண்வெட்டி, கதிர் அரிவாள் தயார் செய்யும் பணிகள் தீவிரம்
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பட்டறைகள் திறக்கப்பட்டதால் விவசாய பணிக்கு தேவையான மண்வெட்டி, கதிர் அரிவாள் போன்றவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
தஞ்சாவூர்,
ஊரடங்கு தளர்வுக்கு பின்னர் பட்டறைகள் திறக்கப்பட்டதால் விவசாய பணிக்கு தேவையான மண்வெட்டி, கதிர் அரிவாள் போன்றவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகிறது.
விவசாய பணிகள் தீவிரம்
தமிழகத்தின் நெற்களஞ்சியமாக தஞ்சை மாவட்டம் விளங்கி வருகிறது. இந்த மாவட்டத்தில் குறுவை, சம்பா, தாளடி என 3 போகம் நெல் சாகுபடி நடைபெறும். 4½ லட்சம் ஏக்கர் பாசன வசதி கொண்ட தஞ்சை மாவட்டத்தில் விவசாய தொழிலை நம்பி ஏராளமான விவசாயிகள், விவசாய தொழிலாளர்கள் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு உத்தரவால் ஆரம்ப காலக்கட்டத்தில் விவசாய பணிகள் முடங்கின. பின்னர் விவசாய பணிக்கு விதிவிலக்கு அளிக்கப்பட்டதையடுத்து விவசாய பணிகள் தங்கு தடையின்றி நடைபெற்று வருகின்றன. தற்போது விவசாயிகள் கோடை நெல் சாகுபடிக்கான ஆயத்த பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார்கள்.
பட்டறைகள் திறக்கப்படவில்லை
அடுத்த மாதம்(ஜூன்) 12-ந் தேதி மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கு 1 மாதத்திற்கு முன்னதாகவே விவசாயிகள் வயல்களை தயார் செய்வது, நாற்றங்கால் தயாரிப்பது போன்ற பணிகளை மேற்கொள்வார்கள். இதற்காக பட்டறைகளில் புதிதாக மண்வெட்டிகள் தயார் செய்வது வழக்கம். ஆனால் ஊரடங்கு காரணமாக பட்டறைகள் திறக்கப்படவில்லை. இதனால் புதிதாக மண்வெட்டிகள், கதிர் அரிவாள் போன்றவை தயார் செய்ய முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் விவசாயிகள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு செய்யப்பட்டதையடுத்து கடந்த 11-ந் தேதி முதல் பட்டறைகள் திறக்கப்பட்டன.
தயார் செய்யும் பணி
இதையடுத்து விவசாயிகள் மண்வெட்டிகள், கதிர் அரிவாள் போன்றவற்றை செய்வதற்கு அதிக அளவில் ஆர்டர்கள் கொடுத்து வருகிறார்கள்.
தஞ்சை மாவட்டத்தில் இது போன்ற பட்டறைகள் 50-க்கும் மேற்பட்டவை உள்ளன. இவற்றில் தற்போது மண்வெட்டிகள், கதிர் அரிவாள் ஆகியவை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றன.
வாழ்வாதாரம் பாதிப்பு
இது குறித்து 3 தலைமுறையாக பட்டறை நடத்தி வரும் தஞ்சை மாரியம்மன் கோவிலை சேர்ந்த பாஸ்கர் கூறுகையில், “ஊரடங்கினால் எங்களின் வாழ்வாதாரம் முழுமையாக பாதிக்கப்பட்டது. குடும்பம் நடத்துவதற்கு கூட சிரமப்பட்டோம். தற்போது பட்டறைகள் திறக்க அனுமதிக்கப்பட்டதால் திறந்துள்ளோம். விவசாயிகளும் மண்வெட்டி, கதிர் அரிவாள் போன்றவை செய்து தருமாறு கேட்டு வருகிறார்கள். தற்போது மண்வெட்டி தான் அதிக அளவில் தயார் செய்து வருகிறோம். 1 மண்வெட்டி தயார் செய்து கொடுப்பதற்கு 3 நாட்கள் ஆகி விடும். இதற்காக ரூ.400 முதல் ரூ.500 வரை கூலியாக வாங்குவோம். அதே போல் கதிர்அரிவாள் செய்ய ரூ.150 முதல் ரூ.200 வரை கூலியாக வாங்குவோம்” என்றார்.
Related Tags :
Next Story