சொந்தமாக கார் இல்லை: உத்தவ் தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.143 கோடி - வேட்பு மனுவில் தகவல்


சொந்தமாக கார் இல்லை: உத்தவ் தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.143 கோடி - வேட்பு மனுவில் தகவல்
x
தினத்தந்தி 13 May 2020 5:08 AM IST (Updated: 13 May 2020 5:08 AM IST)
t-max-icont-min-icon

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் சொத்து மதிப்பு ரூ.143 கோடி என்றும், அவருக்கு சொந்தமாக கார் இல்லை என்றும் தனது வேட்பு மனுவில் கூறியுள்ளார்.

மும்பை, 

முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே மராட்டிய மேல்-சபைக்கு நடைபெற உள்ள எம்.எல்.சி. தேர்தலில் போட்டியிடுகிறார். இதற்காக அவர் நேற்று முன்தினம் வேட்பு மனு தாக்கல் செய்தார். வேட்பு மனுவில் அவருக்கு ரூ.143 கோடி சொத்துகள் உள்ளதாக கூறியுள்ளார்.

இதில் வேட்பு மனுவில் குறிப்பிடப்பட்டுள்ள தகவலின்படி உத்தவ் தாக்கரே பெயரில் ரூ.24.14 கோடி, மனைவி ராஷ்மி தாக்கரே பெயரில் ரூ.36.16 கோடி, இந்து கூட்டு குடும்பத்தின் கீழ் ரூ.1.58 கோடி அசையும் சொத்துகள் உள்ளன.

இதேபோல முதல்-மந்திரி பெயரில் ரூ.37.93 கோடி, அவரது மனைவி பெயரில் ரூ.28.92 கோடி அசையா சொத்துகளும், பரம்பரை சொத்து ரூ.14.50 கோடிக்கும் உள்ளது.

கார் இல்லை

இதுதவிர உத்தவ் தாக்கரேவுக்கு ரூ.4.06 கோடி, அவரது மனைவிக்கு ரூ.11.44 கோடி கடன் உள்ளதாகவும், அவரது பெயரிலோ அல்லது மனைவியின் பெயரிலோ சொந்தமாக கார் உள்பட எந்த வாகனங்களும் இல்லை எனவும் வேட்பு மனுவில் கூறப்பட்டுள்ளது. 

முதல்-மந்திரி சம்பளம், வட்டி, தனியார் நிறுவனங்களில் செய்துள்ள முதலீட்டில் கிடைக்கும் லாபத்தின் பங்கு போன்றவற்றின் மூலம் உத்தவ் தாக்கரேவுக்கு வருமானம் கிடைக்கிறது.

இதேபோல முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயின் மீது 23 வழக்குகள் இருந்ததாகவும் இதில் 12 வழக்குகளில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதில் பெரும்பாலானவை உத்தவ் தாக்கரே சாம்னாவின் ஆசிரியராக இருந்த போது தொடரப்பட்ட அவதூறு வழக்குகள் ஆகும்.

Next Story