மேட்டுப்பாளையம் புதிய காய்கறி மார்க்கெட்டில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத 70 மண்டிகளுக்கு அபராதம் - ஆர்.டி.ஓ. அதிரடி நடவடிக்கை
மேட்டுப்பாளையம் புதிய காய்கறி மார்க்கெட்டில் ஆர்.டி.ஓ. சுரேஷ் அதிரடி ஆய்வு நடத்தி, சமூக இடைவெளியை கடைபிடிக்காத 70 காய்கறி மண்டிகளுக்கு அபராதம் விதித்து நடவடிக்கை எடுத்தார்.
மேட்டுப்பாளையம்,
கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அன்னூர் ரோட்டில் புதிய காய்கறி மார்க்கெட்டில் 90-க்கும் மேற்பட்ட காய்கறி மண்டிகள் உள்ளன. இங்கு விற்பனைக்காக நீலகிரி மாவட்டம் மற்றும் கர்நாடகாவில் இருந்து காய்கறிகள் தினசரி லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. அதேபோல் மேட்டுப்பாளையம் மார்க்கெட்டில் இருந்து தமிழகம் மற்றும் கேரளாவுக்கு லாரிகள் மூலம் காய்கறிகள் அனுப்பி வைக்கப்படுகின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதை தடுத்தல் மற்றும் ஊரடங்கையொட்டி மார்க்கெட்டில் தினசரி 30 காய்கறி கடைகள் தான் செயல்பட வேண்டும். அதிகாலை 4 மணி முதல் காலை 8 மணிக்குள் லாரிகளில் வந்த காய்கறிகளை இறக்கி விட வேண்டும். விற்பனை முடிந்ததும் காலை 9 மணிக்கு மேல் காய்கறிகளை லாரிகளில் ஏற்றி மதியம் 1 மணிக்குள் வெளியூர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று வருவாய்த் துறையினர் அறிவுறுத்தி இருந்தனர்.
இந்த நிலையில் நேற்று மதியம் 12 மணிக்கு கோவை வடக்கு ஆர்.டி.ஓ. சுரேஷ், மேட்டுப்பாளையம் புதிய காய்கறி மார்க்கெட்டில் திடீரென்று ஆய்வு செய்தார். அப்போது வருவாய்த்துறையினரின் அறிவுரையை மீறி 30 மண்டிகளுக்கு மேல் 70 மண்டிகள் செயல்பட்டுக் கொண்டு இருந்தன. மேலும் காய்கறி மண்டிகளின் முன்பு சானிடைசர் மற்றும் கைகளை கழுவ தண்ணீர் வைக்கப்பட வில்லை. குறிப்பாக சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் கடைகள் செயல்பட்டதும் உறுதியானது.
இதையடுத்து ஆர்.டி.ஓ. சுரேஷ், சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் செயல்பட்ட மண்டிகளுக்கு தலா ரூ.1000 வீதம் 70 மண்டிகளுக்கு மொத்தம் ரூ.70 ஆயிரம் அபராதம் விதித்து அதிரடி நடவடிக்கை எடுத்தார். மேலும் அவர், அங்கிருந்த காவல்துறையினரிடம் மார்க்கெட்டில் முகக்கவசம் அணியாதவர்கள் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும். மார்க்கெட் நுழைவுவாயில் முன் தடுப்பு ஏற்படுத்தி மார்க்கெட்டுக்குள் மதியம் ஒரு மணிக்கு மேல் லாரிகள் வருவதை தடுக்க வேண்டும் என்று அறிவுறுத்தினார்.
இதனால் மார்க்கெட் நுழைவுவாயிலில் தடுப்பு ஏற்படுத்தப்பட்டது. இதனால் மார்க்கெட்டில் இருந்து வெளியேயும், வெளியே இருந்து மார்க்கெட்டிற்குள்ளும் காய்கறி லாரிகள் வர முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் லாரிகள் நீண்ட வரிசையில் ரோட்டில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. இதையடுத்து ஆர்.டி.ஓ.சுரேஷிடம், ஜடையம்பாளையம் ஊராட்சி தலைவர் பழனிசாமி மற்றும் காய்கறி வர்த்தக சபை நிர்வாகிகள் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது, காய்கறி லாரிகளை மதியம் 1 மணிக்குள் வெளியூர்களுக்கு அனுப்பி வைப்பது சிரமமாக உள்ளது. எனவே காய்கறி லாரிகளை மதியம் 3 மணி வரை வெளியூர்களுக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.
Related Tags :
Next Story