ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தின கொண்டாட்டம்
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
நாகர்கோவில்,
ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் செவிலியர் தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது.
செவிலியர் ஆண்டாக அறிவிப்பு
இங்கிலாந்தைச் சேர்ந்த பிளாரன்ஸ் நைட்டிங்கேல் தான் செவிலியர் முறையை உருவாக்கியவர். அவரை கவுரவிக்கும் பொருட்டும், அவருடைய சிறந்த பணிகளை போற்றும் விதமாகவும் ஆண்டுதோறும் அவருடைய பிறந்த தினமான மே மாதம் 12-ந் தேதி சர்வதேச செவிலியர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.
இந்த ஆண்டு பிளாரன்ஸ் நைட்டிங்கேலின் 200-வது பிறந்த தினமாகும். எனவே 2020-ம் ஆண்டை உலக சுகாதார நிறுவனம் செவிலியர் மற்றும் தாதியர் தினமாக அறிவித்து கவுரவித்துள்ளது.
உறுதிமொழி
அதன்படி இந்த ஆண்டுக்கான செவிலியர் தினம் நேற்று உலகம் முழுவதும் கொண்டாடப்பட்டது. கொரோனா வைரஸ் பரவி வரும் நிலையில் செவிலியர்களின் பணியை உலகமே வியந்து பாராட்டி வருகிறது. அதாவது உயிரை பணயம் வைத்து கொரோனா நோயாளிகளை குணப்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்த நிலையில் வந்த செவிலியர்கள் தினம் அவர்களுக்கு மேலும் கவுரவத்தை ஏற்படுத்தியது. நாகர்கோவில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் செவிலியர்களை பெருமைப்படுத்தும் விதமாக செவிலியர் தின விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி ஆஸ்பத்திரி கூட்ட அரங்கில் தலைமை செவிலியர்கள் வல்சலா, தாய், ஆன்லெட் ஆகியோர் தலைமையில் அனைத்து செவிலியர்களும் பிளாரன்ஸ் நைட்டிங்கேல் நினைவாக மெழுகுவர்த்தி ஏந்தி உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். பிளாரன்ஸ் நைட்டிங்கேல் உருவப்படம் அலங்கரித்து வைக்கப்பட்டு இருந்தது.
‘கேக்‘ வெட்டி கொண்டாட்டம்
பின்னர் டீன் அறையில் கேக் வெட்டும் நிகழ்ச்சி நடந்தது. அப்போது, டீன் சுகந்தி ராஜகுமாரி கேக் வெட்டி அனைத்து செவிலியர்களுக்கும் வழங்கினார். தொடர்ந்து செவிலியர்களின் பணியை பாராட்டி, வாழ்த்தினார். இந்த நிகழ்ச்சியில் ஆஸ்பத்திரி சூப்பிரண்டு அருள்பிரகாஷ், உறைவிட மருத்துவ அதிகாரி ஆறுமுகவேலன், உதவி உறைவிட மருத்துவ அதிகாரிகள் ரெனிமோள், விஜயலெட்சுமி ஆகியோர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story