வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு


வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் பரபரப்பு சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 13 May 2020 7:04 AM IST (Updated: 13 May 2020 7:04 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நாகர்கோவில், 

நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வெளிமாநில தொழிலாளர்கள் மீண்டும் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் செய்யப்படுவதாக குற்றம்சாட்டினர்.

வெளிமாநில தொழிலாளர்கள்

நாடு முழுவதும் கொரோனா வைரசை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு வருகிற 17-ந் தேதி வரை அமலில் உள்ளது. இதனால் போக்குவரத்து முற்றிலும் முடங்கி இருக்கிறது. இதன் காரணமாக வெளி மாநிலத்தில் தங்கி உள்ள தொழிலாளர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமலும், போதுமான உணவு கிடைக்காமலும் தவித்து வருகிறார்கள். இந்த நிலையில் ஊரடங்கு உத்தரவில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டதால் வெளிமாநில தொழிலாளர்கள் தங்களது சொந்த மாநிலம் செல்ல மத்திய அரசு அனுமதி அளித்தது.

இதை தொடர்ந்து தமிழக அரசு மாநிலம் முழுவதும் தங்கி உள்ள வெளிமாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த மாநிலங்களுக்கு அனுப்பி வைக்கும் பணியில் ஈடுபட்டனர்.

கணக்கெடுப்பு

இதே போல குமரி மாவட்டத்தில் தங்கியுள்ள வெளி மாநில தொழிலாளர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்புவதற்காக கணக்கெடுப்பு பணி தீவிரமாக நடந்து வருகிறது. மேலும் இணையதளம் மூலமாகவும் தொழிலாளர்கள் விண்ணப்பித்து வருகிறார்கள். குமரி மாவட்டத்தில் தங்கி உள்ளவர்களில் பெரும்பாலானோர் ஆந்திரா, அசாம், ராஜஸ்தான், மத்திய பிரதேசம் மற்றும் அரியானாவைச் சேர்ந்தவர்கள்.

இவர்கள் ஏற்கனவே 2 முறை நாகர்கோவிலில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலகத்திற்கு வந்து தங்களை சொந்த ஊருக்கு அனுப்பும்படி கோரிக்கை வைத்தனர். அப்போது அவர்களை இணையதளத்தில் விண்ணப்பிக்கும்படி கூறி அனுப்பினர். ஆனால், குமரி மாவட்டத்தில் இருந்து வெளிமாநில தொழிலாளர்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைப்பதில் தாமதம் ஏற்பட்டது.

மீண்டும் திரண்டனர்

இந்தநிலையில் 60-க்கும் அதிகமான வெளிமாநில தொழிலாளர்கள் நேற்று மீண்டும் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டனர். பின்னர், சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கும்படி கோரிக்கை வைத்தனர்.

இதுபற்றி அவர்களிடம் கேட்ட போது, “நாங்கள் குமரி மாவட்டத்தில் கட்டிட பணி, கடைகள், ஓட்டல்கள், பேக்கரிகள் மற்றும் ஆஸ்பத்திரிகளில் தங்கி இருந்து வேலை செய்து வருகிறோம். ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளதால் நாங்கள் மிகவும் பாதிப்பு அடைந்துள்ளோம். தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இருந்து வெளிமாநில தொழிலாளர்கள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டு வருகிறார்கள். ஆனால் குமரி மாவட்டத்தில் இருந்து தொழிலாளர்களை அனுப்பி வைப்பதில் தாமதம் செய்கிறார்கள். இதுபற்றி கேட்டால் நாங்களே வாகனங்கள் ஏற்பாடு செய்து சொந்த ஊருக்குச் செல்லலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் வாகனங்களுக்கு இபாஸ் கிடைப்பது இல்லை. எனவே மாவட்ட நிர்வாகம் எங்களை சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும்“ என்றனர்.

பரபரப்பு

ஏராளமான தொழிலாளர்கள் கலெக்டர் அலுவலகத்தில் திரண்டதால் அங்கு சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது. இதனால் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு இருந்தது.

இதைத் தொடர்ந்து தகவல் அறிந்து அங்கு வந்த அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான் வெளிமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இதில் உடன்பாடு ஏற்பட்டதை தொடர்ந்து அவர்கள் கலைந்து சென்றனர்.

Next Story