மாலத்தீவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா இல்லை கன்னியாகுமரியில் இருந்து 24 பேர் தனி பஸ்சில் சொந்த ஊர் புறப்பட்டனர்
மாலத்தீவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து 24 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர்.
கன்னியாகுமரி,
மாலத்தீவில் இருந்து வந்தவர்களுக்கு கொரோனா இல்லை என்பது தெரிய வந்தது. இதையடுத்து 24 பேர் சொந்த ஊர்களுக்கு புறப்பட்டனர். மீதமுள்ளவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர்.
மாலத்தீவில் இருந்து...
கொரோனா நோயால் உலகம் முழுவதும் பாதிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக வான்வழி உள்பட அனைத்து வகையான போக்குவரத்துகளும் நிறுத்தப்பட்டுள்ளன. சொந்த பணி காரணமாக பல்வேறு நாடுகளில் வசித்து வரும் இந்தியர்கள் சொந்த ஊர்களுக்கு திரும்ப முடியாமல் தவித்து வருகின்றனர். அவர்களை மீட்டு வர மத்திய, மாநில அரசுகள் பல்வேறு கட்ட நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
அந்த வகையில் மாலத்தீவில் உள்ள இந்தியர்களை மீட்டு வர மத்திய அரசு கப்பல்படைக்கு சொந்தமான ஒரு கப்பலை அனுப்பி வைத்தது. அதில் தமிழர்கள் உள்பட 698 பேர் கடந்த 10-ந் தேதி கேரள மாநிலம் கொச்சி துறைமுகத்திற்கு வந்தனர். அதில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டத்தை சேர்ந்த 147 பேர் தமிழக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 7 பஸ்கள் மற்றும் 5 கார்களில் குமரி மாவட்டத்திற்கு அழைத்து வரப்பட்டனர். அப்படி அழைத்து வரப்பட்ட 147 பேரிடமும் தமிழக- கேரள எல்லையான களியக்காவிளையில் கொரோனா பரிசோதனை செய்ய ரத்தம் மற்றும் சளி மாதிரிகள் சேகரிக்கப்பட்டன.
விடுதியில் தங்க வைப்பு
பின்னர் அவர்களில் ஒரு பெண் உள்பட 30 பேர் கொல்லங்கோடு அருகே கண்ணனாகம் பகுதியில் உள்ள தங்கும் விடுதியிலும், 3 பெண்கள் உள்பட 57 பேர் களியக்காவிளையில் உள்ள ஒரு தங்கும் விடுதியிலும், மீதமுள்ள 60 பேர் கன்னியாகுமரி உள்ள ஒரு விடுதியிலும் தங்க வைக்கப்பட்டனர். அவர்களுக்கு தேவையான உணவு உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை அந்தந்த பேரூராட்சி ஊழியர்கள் வழங்கி வருகிறார்கள். அந்த பகுதியில் அடிக்கடி கிருமி நாசினி தெளிக்கப்பட்டு வருகிறது.
மேலும் 3 விடுதிகளை சுற்றிலும் போலீசார் மற்றும் ராணுவ வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரி கொடுத்து இருந்தவர்கள் பரிசோதனை முடிவுக்காக காத்திருந்தனர்.
24 பேர் அனுப்பி வைக்கப்பட்டனர்
இந்தநிலையில் கன்னியாகுமரி விடுதியில் தங்க வைக்கப்பட்டிருந்த தென்காசி, மதுரை, தேனி, சிவகங்கை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, திருவாரூர், நாகப்பட்டினம் உள்ளிட்ட வெளிமாவட்டங்களைச் சேர்ந்த 60 பேரில் 24 பேருக்கு கொரோனா பரிசோதனை முடிவுகள் நேற்று வந்தன. அதில் 24 பேருக்கும் கொரோனா தொற்று இல்லை என தெரியவந்தது.
இதையடுத்து நேற்று மாலை 24 பேரையும் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு நடந்தது. நாகர்கோவில் கோட்டாட்சியர் மயில், பயிற்சி துணை கலெக்டர் பிர்தவ்ஸ் பாத்திமா, அகஸ்தீஸ்வரம் தாசில்தார் அப்துல் மன்னான், கன்னியாகுமரி வருவாய் ஆய்வாளர் செய்யது இப்ராகிம், கன்னியாகுமரி பேரூராட்சிகளின் செயல் அலுவலர் சத்தியதாஸ், சுகாதார அதிகாரி முருகன் ஆகியோர் முன்னிலையில் 24 பேரும் அரசு பஸ்சில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். கன்னியாகுமரி விடுதியில் உள்ள மீதமுள்ள 36 பேர், கொல்லங்கோட்டில் 30 பேர் மற்றும் களியக்காவிளையில் உள்ள 57 பேரும் தங்களது பரிசோதனை முடிவுக்காக காத்திருக்கின்றனர். அவர்களுக்கும் தொற்று இல்லை என்றால் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்படுவர்.
Related Tags :
Next Story