மக்கள் பிரதிநிதிகளை ஆய்வுக்கூட்டங்களுக்கு அழைக்காவிட்டால் கலெக்டருக்கு எதிராக போராட்டம் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேட்டி


மக்கள் பிரதிநிதிகளை ஆய்வுக்கூட்டங்களுக்கு அழைக்காவிட்டால் கலெக்டருக்கு எதிராக போராட்டம் வி.செந்தில்பாலாஜி எம்.எல்.ஏ. பேட்டி
x
தினத்தந்தி 13 May 2020 9:46 AM IST (Updated: 13 May 2020 9:46 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் தேவைப்படுவோரின் விவரங்களை மனுக்களாக வழங்கினார்.

கரூர், 

அரவக்குறிச்சி தொகுதி எம்.எல்.ஏ. வி.செந்தில் பாலாஜி, கரூர் மாவட்ட கலெக்டர் அன்பழகனை சந்தித்து, கரூர் மாவட்டத்தில் ஊரடங்கு உத்தரவால் பாதிக்கப்பட்டு உணவுப் பொருட்கள் தேவைப்படுவோரின் விவரங்களை மனுக்களாக வழங்கினார். 

பின்னர் அவர் நிருபர்களிடம் கூறுகையில், ஊரடங்கால் தமிழகம் முழுவதும் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டபோது, அவர்களுக்கு உதவ ஆளும் தமிழக அரசு முன்வராத நிலையில், பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவ தி.மு.க.வினருக்கு கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். 

அதனடிப்படையில் கரூர் மாவட்டத்தில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களுக்கு முககவசம், கிருமிநாசினி வழங்கினோம். மேலும் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு 200 இருக்கைகள், மண்மங்கலம் அரசு மருத்துவமனைக்கு ரூ.1.45 லட்சம் மதிப்பில் மருத்துவ உபகரணம் வழங்கினோம். மாவட்டத்தில் யாருக்கெல்லாம் உணவுப்பொருட்கள், உணவு தேவைப்படுகிறதோ அவர்களுக்கு செல்போன் நம்பர் கொடுத்து, அதன் மூலம் தேவைப்படுவோருக்கு வழங்கி வருகிறோம். 

இதுநாள்வரை அனைத்து தொகுதிகளை சேர்ந்த ஒரு லட்சத்து 40 ஆயிரம் குடும்பங்களுக்கு ரூ.7 கோடி மதிப்பிலான பொருட்கள் வழங்குவது என இலக்கு நிர்ணயித்து கொடுத்து வந்தோம். ஆனால் இலக்கையும் தாண்டி இதுநாள் வரை 1 லட்சத்து 64 ஆயிரத்து 829 குடும்பங்களுக்கு கொடுத்துள்ளோம். கரூருக்கு மட்டுமே ஆளுங்கட்சியினர் கொடுத்துள்ளனர். அதிலும் அவர்கள் வழங்கிய பொருட்கள் மீது பல்வேறு குற்றச்சாட்டுகளை பொதுமக்கள் முன் வைத்துள்ளனர்.

கொரோனா தொற்று நடவடிக்கை தொடர்பாக மாவட்ட கலெக்டர் நடத்தும் கூட்டங்களில் என்னையோ, குளித்தலை எம்.எல்.ஏ. ராமரையோ, கரூர் எம்.பி. ஜோதிமணியையோ அழைப்பதில்லை. ஆனால் கூட்டங்களில் கிருஷ்ணராயபும் எம்.எல்.ஏ., கரூர் எம்.எல்.ஏ. ஆகியோர் பங்கேற்கிறார்கள். 

இது தொடர்பாக கலெக்டரிடம் கேட்டபோது, கூட்டம் நடத்துவது எனக்கே தெரியாது, என்கிறார். அவர்கள் தகவல் தெரிந்து பங்கேற்கிறார்கள். உங்களுக்கு தகவல் தெரிந்தால் நீங்களும் பங்கேற்கலாம் என பக்குவமற்ற பதிலை கூறுகிறார். கலெக்டருக்கு தெரியாமல் கூட்டம் நடந்தது என அவர் கூறுவது மாவட்ட நிர்வாகத்தின் சீர்குலைவை காட்டுகிறது. இனியும் இதுபோன்று நடந்து கொண்டால் கட்சித்தலைமை அனுமதியோடு அவருக்கு எதிராக போராட்டம் நடத்துவோம், என்றார்.

Next Story