குளித்தலை அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பூண்டு வியாபாரி பலி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு


குளித்தலை அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதல்; பூண்டு வியாபாரி பலி ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 13 May 2020 10:01 AM IST (Updated: 13 May 2020 10:01 AM IST)
t-max-icont-min-icon

குளித்தலை அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பூண்டு வியாபாரி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

குளித்தலை, 

குளித்தலை அருகே வேன்கள் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் பூண்டு வியாபாரி பரிதாபமாக இறந்தார். இந்த விபத்தால் அப்பகுதியில் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

பூண்டு வியாபாரி

குளித்தலை கலப்பு காலனி பகுதியை சேர்ந்தவர் பாண்டியன் என்ற பூண்டு பாண்டியன் (வயது 42). கடை வைத்து பூண்டு வியாபாரம் செய்து வந்த இவர், ஊரடங்கு அமல்படுத்தப்பட்ட பின்னர் சரக்கு வேனில் பூண்டு மற்றும் வெங்காயத்தை கொண்டு சென்று விற்பனை செய்து வந்தார். இந்த நிலையில் இவர் நேற்று முன்தினம் இரவு குளித்தலையில் இருந்து திருச்சிக்கு சென்றார். அங்கிருந்து சரக்கு வேனில் வெங்காய மூட்டைகளை ஏற்றிக்கொண்டு நேற்று அதிகாலை குளித்தலைக்கு வந்து கொண்டிருந்தார்.

கரூர்- திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் குளித்தலை அருகே உள்ள மருதூர் போலீஸ் சோதனைச்சாவடி அருகே வந்தபோது, அந்த வழியாக கோயம்புத்தூரில் இருந்து கும்பகோணம் நோக்கி சென்ற பார்சல் வேன், சரக்கு வேன் மீது நேருக்கு நேர் மோதியது. இதில் பலத்த காயமடைந்த பாண்டியன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். பார்சல் வேனின் டிரைவரான பன்ருட்டி பகுதியை சேர்ந்த சுரேஷ் படுகாய மடைந்தார்.

போக்குவரத்து பாதிப்பு

இது குறித்து தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற குளித்தலை போலீசார், பாண்டியனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் பார்சல் வேனில் இடிபாடுகளில் சிக்கியிருந்த டிரைவர் சுரேசை, போலீசார் மீட்டு சிகிச்சைக்காக குளித்தலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் சுரேஷ் மேல்சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

இந்த விபத்து காரணமாக திருச்சி-கரூர் தேசிய நெடுஞ்சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்துக்குள்ளான வாகனங்களை போலீசார் அப்புறப்படுத்தி, போக்குவரத்தை சீர் செய்தனர். விபத்து குறித்து குளித்தலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story