குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் 5 கிலோ மீட்டர் நடந்து வந்து பொதுமக்கள் போராட்டம்
குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் 5 கிலோ மீட்டர் நடந்து வந்த பொதுமக்கள் தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
தோகைமலை,
குடிநீர் வழங்க கோரி காலிக்குடங்களுடன் 5 கிலோ மீட்டர் நடந்து வந்த பொதுமக்கள் தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
காத்திருப்பு போராட்டம்
கரூர் மாவட்டம் தோகைமலை அருகே கல்லடை ஊராட்சியில் உள்ள கானாபுதூர் காலனியில் சுமார் 50 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த பகுதி மக்களுக்கு காவிரிகுடிநீர் இணைப்பு மூலம் 10 ஆண்டுகளுக்கு மேலாக கல்லடை ஊராட்சி நிர்வாகத்தினர் குடிநீர் வழங்கி வருகின்றனர். காவிரி குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் ஏற்றப்பட்டு அனைத்து குடியிருப்புகளுக்கும் சீராக வழங்கப்பட்டது. இந்நிலையில் கடந்த 15 நாட்களாக சரியாக குடிநீர் வழங்கப்படவில்லை என்று தெரிகிறது. இது குறித்து கல்லடை ஊராட்சி நிர்வாகத்திடம் பல முறை இப்பகுதியினர் கோரிக்கை விடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் இப்பகுதி பொதுமக்கள் காலிக்குடங்களுடன் கானாபுதூரில் இருந்து தோகைமலைக்கு சுமார் 5 கிலோ மீட்டர் தூரம் நடந்தே வந்து, தோகைமலை ஒன்றிய அலுவலகம் முன்பாக தரையில் அமர்ந்து காத்திருப்பு போராட்டம் நடத்தினர்.
குடிநீர் கிடைக்காமல் அவதி
இதுகுறித்து தகவல் அறிந்த ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன், மேலாளர் ரவி, மண்டல துணை வட்டார வளர்ச்சி அலுவலர் உஷா ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது பொதுமக்கள், கானாபுதூர் காலனிக்கு காவிரி குடிநீர் செல்லும் முக்கிய குழாயில் தனிநபர் ஒருவர் கேட்வால்வு அமைத்து அனுமதி இல்லாமல் குடிநீர் இணைப்பு செய்து உள்ளதாலும், சிலர் மின்மோட்டார் மூலம் குடிநீரை உறிஞ்சி எடுப்பதாலும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு சரிவர குடிநீர் வரவில்லை. இதனால் எங்கள் பகுதிக்கு போதிய குடிநீர் கிடைக்காமல் அவதிக்குள்ளாகும் நிலை உள்ளது, என்று புகார் தெரிவித்தனர்.
இது தொடர்பான மனுவை, ஒன்றிய ஆணையர் ராஜேந்திரன் பெற்றுக்கொண்டார். மேலும், நேரில் ஆய்வு செய்து குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும், என்று உறுதி அளித்தார். இதையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். கொரோனா ஊரடங்கால் போக்குவரத்து இல்லாத நிலையில், குடிநீர் கேட்டு கானாபுதூர் பொதுமக்கள் 5 கிலோ மீட்டர் குழந்தைகளுடன் நடந்தே வந்த சம்பவம் இப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story