ஊரடங்கால் பாதிப்படைந்த விவசாயிகள் சந்திக்கும் மற்றொரு பிரச்சினை: விவசாயத்திற்கு மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு
ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயிகளுக்கு மற்றொரு பிரச்சினையாக விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.
புதுக்கோட்டை,
ஊரடங்கால் பாதிக்கப்பட்டு இருந்த விவசாயிகளுக்கு மற்றொரு பிரச்சினையாக விவசாயத்திற்கு வழங்கப்படும் மும்முனை மின்சாரம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. எனவே மின்சாரத்தை சீராக வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
ஊரடங்கு
கொரோனா வைரசின் தாக்கத்தில் ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் சில தளர்வு அளிக்கப்பட்டது. இதனால் பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன. தொழில் நிறுவனங்கள் குறிப்பிட்ட அளவில் இயங்க தொடங்கி உள்ளன. இந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுடன் இருந்த கட்டத்தில் வணிக நிறுவனங்கள் செயல்படாத நிலையில் மின்சார பயன்பாடு குறைந்திருந்தது.
இந்த நிலையில் தற்போது இயல்புநிலைக்கு திரும்புகிற நிலையில் கடைகள், நிறுவனங்களில் மின்சார பயன்பாடு அதிகரிக்க தொடங்கி உள்ளது. இதனால் கிராமப்புறங்களில் விவசாயத்திற்கு வழங்கும் மும்முனை மின்சாரம் சீராக வினியோகிக்கப்படவில்லை என குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இது தொடர்பாக புதுக்கோட்டையை சேர்ந்த இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாநில பொது செயலாளர் தனபதி கூறியதாவது:-
மின்சாரம்
கொரோனாவின் தாக்கத்தால் விவசாய தொழில்கள் சற்று பாதிப்படைந்துள்ளன. இருப்பினும் உணவு தட்டுப்பாடு ஏற்படாத வகையில் இன்றளவும் காய்கறிகள் உள்ளிட்டவை வினியோகிக்கப்பட்டு வருகிறது. இதற்கு முக்கிய காரணம் விவசாயம் இன்னும் நடைபெற்று கொண்டிருப்பதால் தான். அத்தகைய விவசாயத்திற்கு இலவசமாக வழங்கப்படும் மும்முனை மின்சாரத்தில் தற்போது சீராக மின்சாரம் வழங்கப்படுவதில்லை. குறிப்பிட்ட நேரத்தில் மின்சாரம் வினியோகிப்பதில்லை. ஏதேனும் ஒரு காரணத்தை கூறி தடை செய்து விடுகின்றனர்.
புதுக்கோட்டை மட்டுமல்ல தமிழகத்தில் பல இடங்களில் இதே நிலை நிலவுகிறது. ஊரடங்கு தளர்வால் மின்சார பயன்பாடு அதிகரித்ததும் இதற்கு ஒரு காரணம். அதேநேரத்தில் மின்சார உற்பத்தியில் தனியாக அதிக கவனம் செலுத்தவில்லை என்றே சொல்லலாம். எனவே விவசாயத்திற்கு தேவையான மும்முனை மின்சாரத்தை சீராக வினியோகிக்க வேண்டும்.
டீசல் மானியம்
புதுக்கோட்டை மாவட்டத்தில் தற்போது கோடை உழவுகள் மேற்கொண்டு வருகின்றனர். எள், நிலக்கடலை, மக்காச்சோளம் உள்ளிட்ட பயிர்களை சிலர் பயிரிடுகின்றனர். இதற்காக சிலர் டிராக்டர் மூலம் உழவு மேற்கொண்டு வருகின்றனர். டீசல் விலை உயர்வால் டிராக்டர் வாடகை கட்டணமும் உயர்ந்துள்ளது. வேளாண்மை துறை மூலம் உழவுக்கு டிராக்டர் பயன்படுத்தலாம் என அறிவிக்கப்பட்டிருந்தாலும் அழைத்தால் யாரும் சரியாக வருவதில்லை. எனவே விவசாயிகள் உழவு மேற்கொள்ள டீசல் மானியம் அளிக்க வேண்டும். இதன் மூலம் விவசாயிகள் பயன்பெற முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story