கொரோனா பரவும் நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வா? மாணவ- மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு


கொரோனா பரவும் நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வா? மாணவ- மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு
x
தினத்தந்தி 13 May 2020 11:31 AM IST (Updated: 13 May 2020 11:31 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவதா? என மாணவ- மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

பெரம்பலூர், 

கொரோனா வைரஸ் பரவும் நேரத்தில் எஸ்.எஸ்.எல்.சி. தேர்வு நடத்துவதா? என மாணவ- மாணவிகளின் பெற்றோர் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

1-ந் தேதி தொடங்கி...

கொரோனா ஊரடங்கு காரணத்தினால் தள்ளிவைக்கப்பட்டு இருந்த எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு அடுத்த மாதம் (ஜூன்) 1-ந் தேதி தொடங்கி 12-ந் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. நோய் தொற்றின் தாக்கம் தற்போது அதிகரித்து வரும் நிலையில், எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்து அறிவிப்பு வெளியிடப்பட்டு இருப்பது தேர்வு எழுதும் பெரும்பாலான மாணவர்களின் பெற்றோர் இடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது. இதனால் அவர்கள் பொதுத்தேர்வுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்கள். அதேபோல ஒரு சிலர் வரவேற்பு தெரிவித்து உள்ளார்கள். எஸ்.எஸ்.எல்.சி. பொதுத்தேர்வு குறித்து மாணவ- மாணவிகளின் பெற்றோர்கள் பல்வேறு கருத்துகள் தெரிவித்து உள்ளனர். அதன் விவரம் பின்வருமாறு:-

மன அழுத்தம் இல்லாமல்

பெரம்பலூர் ரோஸ்நகரை சேர்ந்த எஸ்.எஸ்.எல்.சி. மாணவன் மாதவனின் தந்தை அண்ணாதுரை கூறியதாவது:-

கொரோனா பயம் இன்னும் அகலவில்லை. இந்த நேரத்தில் தேர்வு அறிவித்திருக்கிறார்கள். தேர்வு மையத்தில் சமூக இடைவெளியை கடைப்பிடிப்பது என்பது சவாலான விஷயம். எனவே எஸ்.எஸ்.எல்.சி.க்கு அறிவிக்கப்பட்ட பொதுத்தேர்வை தள்ளி வைத்தால் நன்றாக இருக்கும். பள்ளிக்கு விடுமுறை விட்டு 2 மாதங்கள் ஆகிவிட்டது. இதனால் பள்ளியில் ஆசிரியர்கள் மாணவர்களுக்கு அளித்த பாடம் நினைவு முழுமையாக இருக்குமா? என்பது சந்தேகம்தான். அதிக விடுமுறை நாட்களில் மாணவர்கள் வீட்டில் இருந்து விட்டு நேரடியாக தேர்வு எழுத சொல்வதால் மாணவர்கள் தயக்கம் காட்டுவதாக தெரிகிறது. மாணவர்கள் பொதுதேர்வை மன அழுத்தம் இல்லாமல் எதிர்கொள்ள அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

பஸ் வசதி

பெரம்பலூர் முத்துநகர் முதல்தெருவை சேர்ந்த மாணவன் வேதவனின் தாய் செல்வி கூறியதாவது:-

தற்போது கொரோனாவின் தாக்கம் அதிகமாக இருப்பதால் மாணவ- மாணவிகளுக்கு தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும். கொரோனா பீதியில் அனைவரும் உறைந்துள்ள னர். மேலும் பள்ளிகள் விடுமுறை விடப்பட்ட பின் குழந்தைகள் பெரும்பாலும் படிக்கவில்லை. ஒரு சில நேரங்களில் படித்தாலும் ஏற்கனவே படித்த பாடங்கள் அனைத்தும் தற்போது நினைவுக்கு இல்லை என்று கூறுகின்றனர். இருப்பினும் தேர்வுக்கு எனது மகனை தயார்படுத்தி ஆக வேண்டும். மாணவர்களுக்கு தேர்வு எழுத அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த வேண்டும். மாணவ- மாணவிகளுக்கு கொரோனா தொற்றிவிடாமல் நடவடிக்கை எடுக்க வேண்டும். குறிப்பாக பஸ் வசதி வேண்டும் என்றார்.

தள்ளி வைக்க வேண்டும்

அரியலூர் மாவட்டம் செம்பியக்குடியை சேர்ந்த மாணவி பரணிகாவின் தாய் செந்தாமரைச்செல்வி கூறியதாவது:-

கொரோனா தொற்று மிதமாக இருந்த காலத்தை விட்டு விட்டு வேகமாக பரவும் கலத்தில் தேர்வு அறிவித்து இருப்பது நியாயம் இல்லை. இன்னும் 2 வார காலத்திற்குள் தேர்வுக்கு மாணவர்களை தயாராக்குவது கடினம். தேர்வு மையத்துக்கு பல இடங்களில் இருந்து மாணவர்கள் வருவார்கள். யாருக்கு நோய் தொற்று இருக்கும் என்று உத்தேசிக்க முடியாது. தேர்வு மையத்தில் யாராவது ஒருவருக்கு நோய் தொற்று இருந்தால், அனைத்து மாணவர்களுக்கும் நோய் தொற்று ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. இதனால் 10-ம் வகுப்பு பொத்தேர்வை தள்ளி வைக்க வேண்டும் என்றார்.

பெரம்பலூரை அடுத்த எசனை ஊராட்சியை சேர்ந்த மாணவி வர்ஷினி தாய் ஈஸ்வரி கூறியதாவது:-

கொரோனா பயம் ஒருபுறம் இருந்தாலும், என் பிள்ளையின் வாழ்க்கையும், எதிர்காலமும் முக்கியம். தேர்வு என்பது மாணவர்களுக்கு தவிர்க்க முடியாத ஒன்று. 10-ம் வகுப்பு தேர்வு முடிவை வைத்து தான். மேற்கொண்டு எனது பிள்ளையை என்ன படிக்க வைக்க வேண்டும் என்று முடிவு செய்ய முடியும். தேர்வு மையத்தில் முறையான நடவடிக்கைகள் எடுத்து மாணவ- மாணவிகள் பாதுகாப்பாக தேர்வு எழுத நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

அரியலூர் அருகே உள்ள வீனாகைகாட்டியை சேர்ந்த தரணிகா தந்தை குபேந்திரன் கூறியதாவது:-

தேர்வு எப்போது வரும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் தேர்வு ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்வு எழுதுவதற்கு இடையிலான விடுமுறை போதுமானதாக இல்லை. மேலும் தற்போது அரியலூர் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்து வருகிறது. இதனை கருத்தில் கொண்டு அதிகாரிகள் பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

Next Story