ஆத்தூரில் பழுதாகி நின்ற டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய கச்சா எண்ணெய்


ஆத்தூரில் பழுதாகி நின்ற டேங்கர் லாரியில் இருந்து சாலையில் ஆறாக ஓடிய கச்சா எண்ணெய்
x
தினத்தந்தி 13 May 2020 11:46 AM IST (Updated: 13 May 2020 11:46 AM IST)
t-max-icont-min-icon

ஆத்தூர் வழியாக சென்ற டேங்கர் லாரியில் பழுது ஏற்பட்டு சாலையில் ஆறாக ஓடிய கச்சா எண்ணெயை பொதுமக்கள் பாத்திரங்களில் பிடித்து சென்றதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆத்தூர்,

சென்னை துறைமுகம் பகுதியில் இருந்து ஒரு டேங்கர் லாரி ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் உள்ள தனியார் சமையல் எண்ணெய் தயாரிக்கும் நிறுவனத்துக்கு சென்றது. அந்த லாரியில் 32 ஆயிரம் லிட்டர் கச்சா எண்ணெய் இருந்தது. அந்த எண்ணெயை சுத்திகரித்து சமையல் எண்ணெயாக மாற்ற கொண்டு சென்றனர்.

டேங்கர் லாரியை ஈரோடு மாவட்டம் வீரப்பன்சத்திரம் பகுதியை சேர்ந்த சிவப்பிரகாசம் (வயது 28) என்பவர் ஓட்டி வந்தார். இந்த நிலையில் சேலம் மாவட்டம் ஆத்தூரில் தேசிய நெடுஞ்சாலையில் தற்போது சாலை பராமரிப்பு பணிகள் நடந்து வருகிறது. இதனால் புறவழிச்சாலையில் செல்லும் வாகனங்கள் நகருக்குள் வந்து செல்கின்றன.

ஆறாக ஓடிய எண்ணெய்

அதன்படி நேற்று காலை கச்சா எண்ணெய் ஏற்றி வந்த டேங்கர் லாரி ஆத்தூர் காமராஜர் ரோட்டில் சென்றபோது ஒரு வேகத்தடையில் ஏறி இறங்கும்போது பாரம் தாங்காமல், நடுப்பகுதியில் துண்டிப்பு ஏற்பட்டு பழுதடைந்தது. இதனால் லாரியில் ஒரு டேங்கரில் உடைப்பு ஏற்பட்டு அதில் இருந்த கச்சா எண்ணெய் சாலையில் வழிந்து, ஆறாக ஓடத்தொடங்கியது. இதைப்பார்த்த டிரைவர் லாரியை ஓரமாக நிறுத்தி விட்டார். மேலும் எண்ணெய் ரோட்டில் கொட்டியதால் இரு சக்கர வாகனங்களில் சென்றவர்கள் சாலையில் வழுக்கி விழுந்தனர்.

இதனிடையே லாரியில் இருந்து எண்ணெய் வழிந்தோடுவதை பார்த்த பொதுமக்கள் சமையல் எண்ணெய் என்று நினைத்து வீட்டில் இருந்து பாத்திரங்கள், குடங்கள், தண்ணீர் கேன்கள் போன்றவற்றை கொண்டு வந்து பிடித்து சென்றனர். இது குறித்து ஆத்தூர் தீயணைப்பு நிலையத்துக்கும், போலீசாருக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. இதன்பேரில் தாசில்தார் பிரகாசம், தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர் மற்றும் தீயணைப்பு வீரர்கள், போலீசார் விரைந்து வந்து அங்கு கூடிய பொதுமக்கள் கூட்டத்தை கலைத்தனர்.

பயன்படுத்த வேண்டாம்

பின்னர் சாலையில் யாரும் வழுக்கி விழாமல் இருக்க, எண்ணெய் மீது மண்ணை கொட்டினார்கள். மேலும் எண்ணெய் ரோட்டில் தேங்கி நிற்காமல் சாக்கடை கால்வாய்க்குள் செல்லும் வகையில் வழி ஏற்படுத்தினர். கச்சா எண்ணெயை பொதுமக்கள் சமையல் எண்ணெய் என்று நினைத்து பிடித்து சென்றதால் ஆத்தூரில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அந்த கச்சா எண்ணெயை பொதுமக்கள் யாரும் பயன்படுத்த வேண்டாம் என்று ஒலி பெருக்கி மூலம் அறிவுறுத்தினார்கள். லாரியில் இருந்து மொத்தம் 4 ஆயிரத்து 500 லிட்டர் கச்சா எண்ணெய் மட்டும் வீணானது. இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Next Story