பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
பெரம்பலூர்,
பெரம்பலூர் மாவட்டத்தில் மேலும் 27 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அதிகரிப்பு
சென்னை கோயம்பேடு காய்கறி மார்க்கெட்டில் வேலைபார்த்த பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த கூலித்தொழிலாளர்கள் 300-க்கும் மேற்பட்டவர்கள் சொந்த ஊருக்கு திரும்பினர். அவர்கள் மூலம் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் தாலுகா மற்றும் அரியலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகாவில் உள்ள கிராமங்களை சேர்ந்தவர்களுக்கு கொரோனா தொற்று அதிகரித்து வந்தது. இந்த நிலையில் கொரோனா தொற்று களரம்பட்டி, எளம்பலூர், செல்லியம்பாளையம் ஆகிய கிராமங்கள் மற்றும் பெரம்பலூர் நகரம், பெரம்பலூர் வட்டார பகுதிகளிலும் அதிகரித்து வருகிறது. மேலும் வேப்பந்தட்டை தாலுகா வாலிகண்டபுரம், மேட்டுப்பாளையம், பசும்பலூர், சிறுநிலா, பாதாங்கி ஆகிய கிராமங்களிலும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
27 பேருக்கு கொரோனா
பெரம்பலூர் மாவட்டத்தில் ஏற்கனவே 105 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில், பெரம்பலூர் மேரிபுரத்தை சேர்ந்த கூட்டுறவு ஊழியரின் மனைவி, துறைமங்கலம் புதுக்காலனியை சேர்ந்த இளைஞர் ஒருவர் மற்றும் 17 கர்ப்பிணிகள் உள்பட 27 பேருக்கு ஒரே நேரத்தில் கொரோனா தொற்று இருப்பது நேற்று காலை உறுதி செய்யப்பட்டது. இந்த 27 பேரில் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ள பெண்களின் எண்ணிக்கை 18 ஆகும். இதனால் இம்மாவட்டத்தில் கொரோனாவில் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 132 ஆக உயர்ந்துள்ளது. இதில் கோயம்பேடு காய்கறி மார்க்கெட் தொழிலாளர்கள் மற்றும் அவர்களது தொடர்பில் இருந்துள்ள 89 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.
தொற்று ஏற்படும் அபாயம்
இதில் சுமார் 70 பேர் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் புதிய வளாகத்தில் உருவாக்கப்பட்டுள்ள கொரோனா வார்டில் தனிமைப்படுத்தப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டுவருகிறது.
இதனிடையே நேற்று முன்தினம் கொரோனா வார்டில் தங்கவைக்கப்பட்டுள்ள கொரோனா தொற்றாளர்கள் எவ்வித தடையும் இன்றி, மருத்துவமனைக்கு வெளியே சாதாரணமாக நடமாடுவதாகவும், இதனால் இந்திராநகர், திருநகர் பகுதிகளை சேர்ந்த பொதுமக்களுக்கு கொரோனா தொற்று ஏற் படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக சமூக ஊடகங்களில் வைரலாக செய்தி பரவியது.
அதன்பேரில் பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையின் கொரோனா வார்டு உள்ள புதிய வளாகத்தில் தெற்கு நுழைவுவாயில், வடக்கு நுழைவு வாயில் ஆகிய இரு பகுதிகளிலும் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். ஏற்கனவே கொரோனா தொற்று மருத்துவ ஆய்வுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ள 100-க்கும் மேற்பட்டோரின் ஆய்வு முடிவுகள் இன்னும் ஓரிரு நாட்களில் கிடைக்கப்பெறும் என சுகாதாரத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
Related Tags :
Next Story