திருச்சுழி அருகே, சம்பளம் தராததால் குடிநீர் மோட்டார் ஆபரேட்டர் தற்கொலை - பரபரப்பு கடிதம் சிக்கியது


திருச்சுழி அருகே, சம்பளம் தராததால் குடிநீர் மோட்டார் ஆபரேட்டர் தற்கொலை - பரபரப்பு கடிதம் சிக்கியது
x
தினத்தந்தி 13 May 2020 12:32 PM IST (Updated: 13 May 2020 12:32 PM IST)
t-max-icont-min-icon

திருச்சுழி அருகே சம்பளம் தராததால் குடிநீர் தொட்டி மோட்டார் ஆபரேட்டர் தற்கொலை செய்துகொண்டார். அதற்கான காரணம் குறித்து பரபரப்பு கடிதம் போலீசாரிடம் சிக்கியது.

திருச்சுழி, 

விருதுநகர் மாவட்டம் திருச்சுழி அருகே உள்ள பனிக்குறிப்பு, முருகையாபுரம், சொக்கம்பட்டி, கல்லாம்பிரம்பு ஆகிய நான்கு கிராமங்களை உள்ளடக்கியது பனிக்குறிப்பு ஊராட்சி.

இதில் முருகையாபுரத்தை சேர்ந்தவர் வீரமுனியசாமி (வயது 48). இவர் முருகையாபுரத்தில் கடந்த 11 ஆண்டுகளாக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி மோட்டார் ஆபரேட்டராக வேலை பார்த்தார். இவருக்கு கடந்த 5 மாதங்களுக்கும் மேலாக ஊதியம் வழங்கப்படவில்லை என கூறப்படுகிறது. இது சம்பந்தமாக மாவட்ட நிர்வாகத்திடமும், வட்டார வளர்ச்சி அலுவலரிடமும் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை எனவும் கூறப்படுகிறது.

தற்போது ஊரடங்கினால் பண நெருக்கடி அதிகரித்ததாலும், ஊதியம் வழங்கப்படாததாலும் வீரமுனியசாமி விபரீதமான முடிவெடுத்து, தனது வீட்டின் அருகே விஷம் குடித்துள்ளார். இதில் அவர் பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்ததும் திருச்சுழி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து விசாரணை நடத்தினார்கள். அப்போது, வீரமுனியசாமி எழுதியதாக ஒரு கடிதத்தை கைப்பற்றினார்கள். அந்த கடித்தத்தில், “தனக்கு 5 மாதமாக சம்பளம் தராதது குறித்தும், தன்னை பணியை வீட்டு நீக்கச் சொல்லி ஊராட்சி மன்ற தலைவி மற்றும் அவருக்கு வேண்டப்பட்டவர்கள் என்னை துன்புறுத்தி, கொலை முயற்சி செய்தனர். ஆகையால் நான் தற்கொலை செய்து கொள்கிறேன்” என குறிப்பிட்டு, அதற்கு காரணமான சிலரது பெயர் விவரத்தையும் கடிதத்தில் குறிப்பிட்டு இருப்பதாகவும் போலீசார் தெரிவித்தனர். இதுதொடர்பாக தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது.

Next Story