ராமநாதபுரத்தில் அடுத்தடுத்த நாளில் சம்பவங்கள்: நர்சை கத்தியால் குத்திய இடத்தில் தற்கொலைக்கு முயன்ற ஆட்டோ டிரைவர் - போலீசார் விசாரணை
நர்சை கத்தியால் குத்திய இடத்தில் அடுத்த நாளில் ஆட்டோ டிரைவர் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ராமநாதபுரம்,
ராமநாதபுரம் கே.கே.நகர் பகுதியை சேர்ந்த கருப்பசாமி என்பவருடைய மனைவி மீனா லட்சுமி (வயது 30). இவர் ராமநாதபுரம் சேதுபதி நகர் பகுதியில் பல் ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார்.
நேற்று முன்தினம் அவர் பணி இடைவேளையின் போது சாப்பிடுவதற்காக மாடிக்கு சென்றுள்ளார். அப்போது கே.கே.நகர் பகுதியை சேர்ந்த பிச்சை மகன் ஆட்டோ டிரைவர் பூமிநாதன்(46) என்பவர் அங்கு வந்து அவரிடம் தகராறு செய்துள்ளார். அப்போது ஆத்திரம் அடைந்த பூமிநாதன் திடீரென மீனாலட்சுமியை சரமாரியாக கத்தியால் குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டார். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த மீனாலட்சுமி உயிருக்கு போராடினார்.
இதற்கிடையே அவரது அலறல் கேட்டு அங்கிருந்தவர்கள் மாடிக்கு ஓடிவந்தனர். மீனாலட்சுமியை சிகிச்சைக்காக ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். இந்த நிலையில் திடீர் திருப்பமாக நர்சு கத்தியால் குத்தப்பட்ட மாடி பகுதியில் இருந்த கழிவறையில் நேற்று காலை ஆட்டோ டிரைவர் பூமிநாதனும் கை மற்றும் கழுத்து அறுபட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கிய நிலையில் கிடந்துள்ளார்.
இதனை அந்த கட்டிட வளாக காவலர் பார்த்து, தகவல் தெரிவித்ததன் பேரில் நகர் போலீசார் அங்கு சென்று பூமிநாதனை மீட்டு ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். முதல்கட்ட விசாரணையில் பூமிநாதன் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்று இருக்கலாம் என தெரியவருகிறது. எனவே அவருக்கும், நர்சுக்கும் ஏற்பட்ட தகராறு என்ன, இந்த சம்பவங்களின் பின்னணி குறித்து தீவிர விசாரணை நடந்து வருகிறது. அடுத்தடுத்த நாளில் நடந்த இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தின.
Related Tags :
Next Story