எப்போது அறிவிப்பு வந்தாலும் இயக்க பஸ்களை தயார் நிலையில் வைத்திருக்கிறோம் - போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்


எப்போது அறிவிப்பு வந்தாலும் இயக்க பஸ்களை தயார் நிலையில் வைத்திருக்கிறோம் - போக்குவரத்து கழக அதிகாரிகள் தகவல்
x
தினத்தந்தி 13 May 2020 12:33 PM IST (Updated: 13 May 2020 12:33 PM IST)
t-max-icont-min-icon

எப்போது அறிவிப்பு வந்தாலும் இயக்க தயார் என்றும், அதற்காக பஸ்களை தயார் நிலையில் வைத்திருப்பதாகவும் போக்குவரத்து கழக அதிகாரிகள் கூறினார்கள்.

ராமநாதபுரம்,

ஊரடங்கில் பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதன் தொடர்ச்சியாக பஸ் போக்குவரத்து தொடங்கப்படும் என்றும், குறிப்பாக வருகிற 18-ந்தேதி முதல் பஸ்கள் இயக்கப்படும் என்றும் கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமநாதபுரம் நகர் போக்குவரத்து கழக மேலாளர் தேவேந்திரன், புறநகர் போக்குவரத்து கழக மேலாளர் தனபால் ஆகியோர் கூறியதாவது:-

வருகிற 18-ந்தேதி பஸ்களை இயக்கும் வகையில் தயார் நிலையில் இருக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி ராமநாதபுரம் மாவட்டத்தில் நகர் கிளையில் உள்ள 52 டவுன் பஸ்கள், புறநகர் கிளையில் உள்ள 53 பஸ்கள் அனைத்தும் கிருமிநாசினி தெளிக்கப்பட்டு பழுது நீக்கப்பட்டு, முழு உறுதி தன்மையுடன் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. போதிய டிரைவர்கள், கண்டக்டர்கள் 18-ந்தேதி முதல் பணியாற்ற தயார் நிலையில் இருக்க உத்தரவிடப்பட்டு உள்ளது.

அவர்கள் அனைவரும் பஸ் டெப்போவிற்கு வரவழைக்கப்பட்டு தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப நிலை பரிசோதித்து கைகளை கிருமிநாசினி மூலம் கழுவி, முககவசம் அணிந்து அதன்பின்னரே பஸ்களை இயக்க அனுமதிக்கப்படுவார்கள். இதேபோல பயணிகளும் முககவசம் அணிந்து கைகளை நன்றாக கழுவிய பின்னரே பஸ்சில் ஏற அனுமதிக்கப்படுவார்கள். மேலும் சமூக இடைவெளியை கடைப்பிடிக்கும் வகையில் பஸ்சில் இடைவெளிவிட்டு பயணம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்.

அனைத்து பஸ்களும் 50 சதவீத பயணிகளுடன் மட்டுமே இயக்கப்படும். கட்டண விகிதம் மற்றும் பஸ்கள் செல்லும் வழித்தடங்கள், நிறுத்தங்கள் விவரம் இன்னும் முடிவு செய்யப்படவில்லை.

18-ந்தேதி பஸ்களை இயக்கலாமா? என்பது குறித்து அரசின் முறையான அறிவிப்பு வந்த பின்னரே அதற்கான வழிமுறைகள் பின்பற்றப்படும். தற்போதைய நிலையில் நகர் மற்றும் புறநகர் கிளையில் அரசின் உத்தரவுப்படி செயல்பட முழுஅளவில் தயார் நிலையில் உள்ளோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி போக்குவரத்து பணிமனை உயர் அதிகாரி ஒருவர் கூறுகையில், “பஸ்களை இயக்குவது குறித்து அறிவிப்பு எப்போது வந்தாலும் இயக்க தயாராக உள்ளோம். விரைவு பஸ்கள், டவுன் பஸ்கள் ஆகியவை சிறப்பான முறையில் உள்ளன. பஸ்கள் இயக்கப்பட்டு 45 நாட்களுக்கும் மேல் ஆகிவிட்டதால் தினந்தோறும் காலை மற்றும் மாலை வேளையில் பஸ்களை இயக்கி சிறிது நேரம் ஓடவிட்டு சோதனை செய்து, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன” என்றார்.

Next Story