கிருமி நாசினி தெளிக்க குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு கைத்தெளிப்பான் எந்திரங்கள் - இலவசமாக மாநகராட்சி வழங்குகிறது
குடியிருப்போர் நலச்சங்களுக்கு கைத்தெளிப்பான் எந்திரங்களை மாநகராட்சி இலவசமாக வழங்குகிறது.
மதுரை,
மதுரை மாநகராட்சி பகுதிகளில் கொரோனா ஒழிப்பு நடவடிக்கைகளை மாநகராட்சி தீவிரப்படுத்தி இருக்கிறது. மாநகராட்சி பகுதிகளில் கைத் தெளிப்பான்கள், பூம் ஸ்பிரே, பவர் ஸ்பிரே, பெல் மிஸ்டர் வாகனம் ஆகியவை மூலம் தினந்தோறும் காலை மற்றும் இரவு நேரங்களில் சுழற்சி முறையில் கிருமி நாசினி மருந்துகள் தெளிக்கப்பட்டு வருகிறது.
தற்போது மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள குடியிருப்போர் நலச்சங்கங்கள், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்புகள், அரசு அலுவலகங்கள் மற்றும் அடுக்குமாடி குடியிருப்புகள் ஆகியவற்றில் கிருமி நாசினி மருந்துகள் தெளிப்பதற்காக மாநகராட்சி சார்பில் கிருமிநாசினி மருந்து தெளிக்கும் கைத்தெளிப்பான் எந்திரங்கள் இலவசமாக வழங்கப்படுகிறது. குறைந்தது 250 குடியிருப்புகள் கொண்ட நலச்சங்கங்கள் தாங்களே பணியாளர்களை அமர்த்தி மருந்துகளை தெளித்து கொள்ளலாம்.
அதன்படி நகரில் உள்ள பல்வேறு குடியிருப்போர் நலச்சங்கங்களுக்கு கமிஷனர் விசாகன் கைத்தெளிப்பான் எந்திரங்களை நேற்று வழங்கினார். அப்போது அவர் ஒவ்வொரு குடியிருப்போர் நலச்சங்கத்தினரும் தங்கள் பகுதியில் உள்ள பொதுமக்களை கொரோனா தொற்றில் இருந்து காப்பதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அனைவருக்கும் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் வகையில் வைட்டமின் மாத்திரைகள், கபசுர குடிநீர் ஆகியவற்றை வழங்க வேண்டும் என்றார்.
இந்த நிகழ்ச்சியில் நகர் பொறியாளர் அரசு, உதவி நகர்நல அலுவலர் வினோத்ராஜா, மக்கள் தொடர்பு அலுவலர் சித்திரவேல், குடியிருப்போர் நலச்சங்கத்தினர் உள்பட மாநகராட்சி அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story