பொள்ளாச்சி நகராட்சியில், முகக்கவசம் அணியாத 24 பேருக்கு அபராதம் அதிகாரிகள் நடவடிக்கை
பொள்ளாச்சி நகராட்சியில் முகக்கவசம் அணியாத 24 பேருக்கு அபராதம் விதித்து, அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
பொள்ளாச்சி,
கொரோனா வைரஸ் ஒருவரிடம் இருந்து மற்றவருக்கு பரவுவதை தடுக்க அனைவரும் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும் என்று மத்திய, மாநில அரசுகள் அறிவுறுத்தி உள்ளன. இதன் காரணமாக பொதுமக்கள், வியாபாரிகள் உள்பட பலரும் முகக்கவசம் அணிந்தபடி சாலைகளில் செல்வதை பார்க்க முடிந்தது. இதற்கிடையில் ஊரடங்கு அமலில் இருந்தும் சில தளர்வுகள் செய்யப்பட்டு கடைகள் திறக்கப்பட்டன. அதன்பிறகு பொள்ளாச்சியில் முகக்கவசம் அணியாமல் பெரும்பாலானோர் சுற்றித்திரிந்து வருகின்றனர். மேலும் கடைகள் திறக்கப்பட்டதால் முக்கிய சாலைகளில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்து உள்ளது.
இந்த நிலையில் நகராட்சி கமிஷனர் காந்திராஜ் உத்தரவின் பேரில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக முகக்கவசம் அணியாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இது தொடர்பாக நடந்த ஆய்வில் சுகாதார ஆய்வாளர்கள் தர்மராஜ், சீனிவாசன், செந்தில்குமார், ஜெயபாரதி, விஜய் ஆனந்த் மற்றும் மேற்பார்வையாளர்கள் ஈடுபட்டனர். இதுகுறித்து நகராட்சி அதிகாரிகள் கூறியதாவது:-
கடைகளில் வியாபாரம் செய்யும் வியாபாரி, பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் கண்டிப்பாக முகக்கவசம் அணிய வேண்டும். காந்தி மார்க்கெட், நேதாஜி ரோடு, மார்க்கெட் ரோடு பகுதிகளில் முகக்கவசம் அணியாமல் வந்த 24 நபர்களுக்கு தலா ரூ.100 அபராதம் விதிக்கப்பட்டது.
இதற்கிடையில் காய்கறி, மீன் கடைகளில் நடத்தப்பட்ட சோதனையில் தடை செய்யப்பட்ட 5 கிலோ பிளாஸ்டிக் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. அபராத தொகையாக ரூ.1500 வசூலிக்கப்பட்டது. சமூக இடைவெளியை கடைபிடிக்காத கடைக்காரர்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. தொடர்ந்து சமூக இடைவெளியை கடைபிடிக்கவில்லை என்றால் நகராட்சி குத்தகை உரிமம் ரத்து செய்யப்பட்டு, கடைக்கு ‘சீல்’ வைக்கப்படும். மேலும் முகக்கவசம் அணியாமல் வரும் பொதுமக்களுக்கு காய்கறிகள், மளிகை பொருட்களை வழங்க கூடாது என்று அனைத்து கடைக்காரர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டு உள்ளது.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.
Related Tags :
Next Story