கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுற்றுலா வாகன டிரைவர்கள் - தொழில் நடத்த அனுமதிக்க கோரிக்கை


கொரோனா ஊரடங்கால் வாழ்வாதாரம் இன்றி தவிக்கும் சுற்றுலா வாகன டிரைவர்கள் - தொழில் நடத்த அனுமதிக்க கோரிக்கை
x
தினத்தந்தி 14 May 2020 4:00 AM IST (Updated: 14 May 2020 12:38 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு உத்தரவால் சுற்றுலா வாகன டிரைவர்கள் வாழ்வாதாரம் இன்றி தவித்து வருகின்றனர். எனவே தொழிலை நடத்த அனுமதிக்க வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

சங்கரன்கோவில், 

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றன. தற்போது 3-வது கட்டமாக ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இருப்பினும் கடந்த வாரம் 4-ந் தேதி ஊரடங்கில் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. 

பின்னர் கடந்த 11-ந் தேதியில் இருந்து மேலும் தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதில் டீக்கடைகள், குளிர்சாதன வசதி இல்லாத சிறிய ஜவுளிக்கடைகள், சிறிய நகைக்கடைகள், வாகன பழுதுபார்ப்பு நிலையங்கள், ஹார்டுவேர்ஸ், செல்போன் விற்பனை கடைகள் உள்ளிட்ட பெரும்பாலான கடைகள் திறக்கப்பட்டன.

மேலும் கட்டுமான தொழில், சலவை தொழில் உள்ளிட்டவைக்கும் அனுமதி கொடுக்கப்பட்டது. ஆனால் ஆட்டோ, வேன், கார் டிரைவர்கள் மற்றும் முடிதிருத்தும் தொழிலாளர்களுக்கு அனுமதி கொடுக்கப்படவில்லை. இதனால் சங்கரன்கோவில் பகுதிகளில் சுற்றுலா கார் ஓட்டுநர்கள் சங்கத்தினர் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அனுமதிக்க வேண்டும்

இதுகுறித்து சங்க தலைவர் கடற்கரை பாண்டியன் கூறியதாவது:-

சங்கரன்கோவில் நகரில் 107 கார் ஓட்டும் தொழிலாளர்கள் உள்ளனர். ஊரடங்கு உத்தரவால் கார் ஓட்டுவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதால் எங்களுடைய வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. 50 நாட்களை கடந்தும் தொழில் செய்ய முடியாமல் திணறி வருகிறோம். தமிழக அரசு நலவாரிய உறுப்பினர்களுக்கு உதவித்தொகை அறிவித்த நிலையில் 95 சதவீதத்துக்கும் மேற்பட்ட டிரைவர்கள் தங்கள் அறியாமையால் நல வாரியத்தில் உறுப்பினர்களாக இல்லாத நிலை உள்ளது.

எனவே தமிழக அரசு இதுகுறித்து பரிசீலனை செய்து சுற்றுலா வாகனங்கள் இயங்குவதற்கு அனுமதி அளிக்க வேண்டும். இல்லையெனில் எங்கள் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு நிவாரண உதவி வழங்க வேண்டும். மேலும் நல வாரியங்களில் ஓட்டுனர்கள் உறுப்பினராவதற்கு சிறப்பு முகாம் நடத்தி அனைவரும் உறுப்பினராக பதிவு செய்ய வழிவகை செய்ய வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார். அவருடன் சங்க செயலாளர் சந்திரன், பொருளாளர் ரசூல் மைதீன் உள்ளிட்ட சங்க நிர்வாகிகள், உறுப்பினர்கள் இருந்தனர்.

Next Story