சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்: வெளியூர்களில் இருந்து வருவோருக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை


சோதனைச்சாவடிகளில் கண்காணிப்பு தீவிரம்: வெளியூர்களில் இருந்து வருவோருக்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ பரிசோதனை
x
தினத்தந்தி 14 May 2020 5:00 AM IST (Updated: 14 May 2020 2:58 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை-தூத்துக்குடி மாவட்ட எல்லையில் உள்ள சோதனைச்சவாடிகளில் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. வெளியூர்களில் இருந்து வருவோருக்கு ‘தெர்மல் ஸ்கேனர்‘ பரிசோதனை செய்யப்படுகிறது.

நெல்லை, 

நெல்லை மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை கட்டுப்படுத்த போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக ஊரடங்கு அமலில் உள்ளது. நாடு முழுவதும் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டு உள்ளது.

ஊரடங்கு காரணமாக சுற்றுலா மற்றும் வெளியூருக்கு வேலைக்கு சென்றவர்கள் வீடு திரும்ப முடியாமல் பரிதவித்து வருகிறார்கள். இவர்கள் ஆங்காங்கே சாலையோரத்தில் தங்கி இருந்து அரசு மற்றும் தன்னார்வலர்கள் கொடுக்கும் உணவுகளை சாப்பிட்டு வருகிறார்கள்.

இவ்வாறு பல்வேறு மாநிலங்களில் சிக்கி தவித்து வரும் தொழிலாளர்களை சிறப்பு ரெயில்களில் சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. நெல்லை மாவட்டங்களை சேர்ந்தவர்கள் வெளி மாநிலங்களில் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் சொந்த ஊர் திரும்ப முடிவு செய்துள்ளனர்.

வெளி மாநிலம் மற்றும் வெளி மாவட்டங்களில் இருந்து நெல்லை மாவட்டத்துக்குள் வருபவர்களை கண்காணிக்க மாவட்ட எல்லையில் வாகன சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. கங்கைகொண்டான், சீவலப்பேரி, பாறைகுளம், கிருஷ்ணாபுரம், வன்னிக்கோனேந்தல், புதூர், நாங்குநேரி இந்திரா நகர், இட்டமொழி, காவல்கிணறு, விஸ்வநாதபுரம், விக்கிரமசிங்கபுரம், இடைகால் உள்ளிட்ட 15 இடங்களில் வாகன சோதனைச்சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன.

இந்த சோதனைச்சாவடிகளில் கூடுதலாக போலீசார் நியமிக்கப்பட்டு உள்ளனர். 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் ஷிப்டு முறையில் போலீசார் பணியமர்த்தப்பட்டு தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வெளியூர்களில் இருந்து வருபவர்களுக்கு இங்கு ‘தெர்மல் ஸ்கேனர்’ மூலம் மருத்துவ பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மேலும், அவர்களுக்கு சளி பரிசோதனையும் செய்யப்படுகிறது. இதில் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டால், அவர்கள் சிகிச்சைக்காக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்படுகிறார்கள். தொற்று இல்லையென்றால், அவர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகிறார்கள்.

தற்போது மருத்துவ பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது. கங்கைகொண்டான் வாகன சோதனைச்சாவடிக்கு நேற்று வெளியூர்களில் இருந்து கார் மூலம் வந்தவர்களை நிறுத்தி மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டது.

அவர்களுக்கு சிப்காட் பகுதியில் உள்ள எல்காட் நிறுவன அலுவலக வளாகத்தில் பரிசோதனை செய்யப்பட்டது. மேலும் வெளியூர்களில் இருந்து இ-பாஸ் மூலம் வந்தவர்களுக்கும் பரிசோதனை நடத்தப்பட்டது. நேற்று எல்லையில் உள்ள அனைத்து வாகன சோதனைச்சாவடிகளிலும் பரிசோதனை தீவிரப்படுத்தப்பட்டது.

தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்த வரை எல்லைகளில் வசவப்பபுரம் உள்பட மொத்தம் 15 சோதனைச்சாவடிகள் உள்ளன. அதில் 5 சோதனைச்சாவடிகள் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகளில் அமைந்து உள்ளன. இங்கு மருத்துவக்குழுவினரும், போலீசாரும் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அவர்கள் வெளிமாவட்டம், வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களின் விவரங்களை சேகரிக்கின்றனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் பரிசோதனை செய்கின்றனர். அதன்பிறகே வெளிமாவட்டங்களை சேர்ந்தவர்கள் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். யாருக்காவது கொரோனா அறிகுறி தென்பட்டால் உடனே அவர்கள் ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்படுகின்றனர்.

அதே நேரத்தில் வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்கள் நேரடியாக தனிமைப்படுத்தி கொரோனா பரிசோதனைக்கு உட்படுத்தப்படுகின்றனர். இந்த பரிசோதனையில் தொற்று இல்லை என்பது உறுதி செய்யப்பட்ட பிறகே வீட்டுக்கு அனுப்பப்படுகிறார்கள். வீட்டில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்படுகின்றனர். அதேபோல் சென்னையில் இருந்து வருபவர்கள் நேரடியாக வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு வருகின்றனர்.


Next Story