3 நுழைவு வாயில்களில் தடுப்புகள்; அனுமதி அட்டை கட்டாயம் தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்


3 நுழைவு வாயில்களில் தடுப்புகள்; அனுமதி அட்டை கட்டாயம் தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள்
x
தினத்தந்தி 14 May 2020 3:54 AM IST (Updated: 14 May 2020 3:54 AM IST)
t-max-icont-min-icon

தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் விற்பனை கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர், 

தஞ்சை பர்மா பஜாரில் செல்போன் விற்பனை கடைகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 3 நுழைவு வாயில்களில் தடுப்புகள் அமைக்கப்பட்டு வண்ண அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி அளிக்கப்படவில்லை.

செல்போன் விற்பனை கடைகள்

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் ஊரடங்கு உத்தரவை அமல்படுத்தி உள்ளது. இந்த உத்தரவில் கடந்த 11-ந் தேதி முதல் சில தளர்வுகளை தமிழக அரசு அறிவித்தது. மேலும் 34 வகையான கடைகளை திறக்கவும் அனுமதி அளித்தது. இதில் குளிர்சாதன வசதி இல்லாத கடைகள், டீ கடைகள், செல்போன் விற்பனை நிலையங்கள், பழுது நீக்கும் கடைகளை திறக்கவும் அனுமதி அளித்தது.

தஞ்சையில் செல்போன் விற்பனை கடைகள் பர்மா பஜார் பகுதியில் உள்ளன. இந்த பகுதியில் சிறிய, பெரிய கடைகள் என 25-க்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இந்த கடைகள் கடந்த 8-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது சமூக இடைவெளி இல்லாமல் மக்கள் திரண்டதையடுத்து கடைகள் உடனடியாக பூட்டப்பட்டன. இதையடுத்து மறுநாள் கடைகள் திறக்க அனுமதிக்கப்படவில்லை.

3 வாயில்களில் தடுப்புகள்

இதையடுத்து கடைகள் 11-ந் தேதி திறக்கப்பட்டது. அப்போது கூட்டம் அதிகமாக கூடியதாலும், சமூக இடைவெளி இல்லாமல் இருந்ததால் மதியம் 2 மணிக்குப்பிறகு கடைகளை மூடுமாறு போலீசார் அறிவுறுத்தினர். அதன்படி கடைகள் மூடப்பட்டன. மேலும் அனைத்து கடைகளிலும் சமூக இடைவெளியை கடைபிடிக்குமாறு போலீசார் அறிவுறுத்தினர்.

இந்த நிலையில் நேற்று மீண்டும் கடைகள் திறக்கப்பட்டன. அப்போது பர்மா பஜார் கடைகளுக்கு செல்லும் நுழைவு வாயில்களான பனகல் கட்டிடம் அருகேயும், ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இருந்து திரும்பும் இடத்திலும், கீழவாசல் பகுதியில் இருந்து அழகிகுளம் வழியாக வரும் வழியான விஜயா தியேட்டர் அருகேயும் போலீசார் இரும்பு தடுப்புகளை அமைத்து இருந்தனர்.

அனுமதி அட்டை கட்டாயம்

ஒவ்வொரு நுழைவு வாயில் பகுதியிலும் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். அவர்கள் பொதுமக்கள் அத்தியாவசிய தேவைக்காக வழங்கப்பட்டுள்ள அனுமதி அட்டையை வைத்திருந்தவர்களுக்கு மட்டுமே அனுமதி அளித்தனர். அனுமதி அட்டை இல்லாமல் வந்தவர்களை திருப்பி அனுப்பினர்.

மேலும் பர்மாபஜார் கடை வீதியில் போலீசாரும் ரோந்து வந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். ஒரு சில கடைகளில் கூட்ட நெரிசலை தவிர்க்க பொதுமக்களுக்காக 1 மீட்டர் இடைவெளியில் இருக்கைகளும் போடப்பட்டு இருந்தன. அதில் பொதுமக்கள் அமர்ந்து வெகு நேரம் காத்திருந்தனர்.

ஒவ்வொருவராக சென்று பொருட்களை வாங்கிச்சென்ற பின்னர் மற்றவர்கள் அனுமதிக்கப்பட்டனர்.

Next Story