ஊரடங்கால் மூடிக்கிடக்கும் அழகு நிலையங்கள்; 5 ஆயிரம் பேர் வேலையிழப்பு
ஊரடங்கு உத்தரவால் தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் வேலை பார்க்கும் 5 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
தஞ்சாவூர்,
ஊரடங்கு உத்தரவால் தஞ்சை மாவட்டத்தில் 2 ஆயிரம் அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளன. இதில் வேலை பார்க்கும் 5 ஆயிரம் பேர் வேலை இழந்துள்ளனர்.
அழகு நிலையங்கள் மூடல்
கொரோனா ரைவஸ் பரவுவதை தடுக்கும் வகையில் பிறப்பிக்கப்பட்டுள்ள ஊரடங்கு உத்தரவு காரணமாக அனைத்து தொழில்களும் பாதிக்கப்பட்டுள்ளன. இதில் அழகு நிலையங்களும் ஒன்றாகும்.
தஞ்சை மாவட்டத்தில் பெரிய அளவிலான குளிர்சாதன வசதியுடன் கூடிய அழகு நிலையங்கள், சிறிய அளவிலான அழகு நிலையங்கள், வீடுகளிலேயே வைத்திருக்கும் அழகு நிலையங்கள் என மாவட்டம் முழுவதும் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட அழகு நிலையங்கள் உள்ளன. இந்த அழகு நிலையங்களில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் வேலை செய்து வருகிறார்கள்.
வேலையிழப்பு
ஊரடங்கு உத்தரவு காரணமாக கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் அழகு நிலையங்கள் அனைத்தும் மூடப்பட்டு உள்ளது. இதனால் இதனை நடத்தி வருபவர்கள், இதில் வேலை பார்த்து வருபவர்கள் அனைவரும் பெரிதும் சிரமப்பட்டு வருகிறார்கள். பெரும்பாலான அழகு நிலையங்கள் வாடகை கட்டிடத்தில்தான் இயங்கி வருகின்றன. இவ்வாறு வாடகை கட்டிடத்தில் இயங்கி வருபவர்கள், வாடகையை கூட செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வருகிறார்கள்.
இந்த நிலையில் தமிழக அரசு கடந்த 11-ந் தேதி முதல் 34 வகையான கடைகளை திறக்க அனுமதி அளித்துள்ளது.
அதன்படி செல்போன் கடைகள், பழுது பார்க்கும் கடைகள், டீக்கடைகள், சிறிய துணிக்கடைகள், நகைக்கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. ஆனால் முடிதிருத்தும் கடை, அழகு நிலையங்களை திறக்க அனுமதி அளிக்கப்படவில்லை.
கலெக்டரிடம் மனு
இதனால் இதனை நடத்தி வருபவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் தஞ்சை மாவட்ட சிகை மற்றும் அழகு நிலைய சங்க தலைவி ராமாயி, செயலாளர் சிவக்குமார், பொருளாளர் நளினி ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தஞ்சை கலெக்டர் கோவிந்தராவை சந்தித்து மனு அளித்தனர். பின்னர் அவர்கள் கூறியதாவது:-
ஊரடங்கு காரணமாக அழகு நிலையங்கள் மூடப்பட்டுள்ளதால் நாங்கள் மிகவும் சிரமப்பட்டு வருகிறோம். எனவே அழகு நிலையங்களை உடனடியாக அரசு திறக்க உத்தரவிட வேண்டும். கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்கும் வகையில் அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் நாங்கள் முழு ஒத்துழைப்பு அளிப்போம். ஒருவருக்கு பயன்படுத்தும் உபகரணத்தை மற்றவர்களுக்கு பயன்படுத்த மாட்டோம். அவற்றை அவர்களிடமே கொடுத்து விடுவோம்.
கடன் தள்ளுபடி
இது தொடர்பாக அனைத்து அழகுகலை நிலையங்களை நடத்தி வருபவர்களுக்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக 3 பேர் கொண்ட குழுவையும் ஏற்படுத்த உள்ளோம். ஊரடங்கு காலத்திற்கு நிவாரணமாக எங்களுக்கு ரூ.15 ஆயிரம் வழங்க வேண்டும். வாடகை மற்றும் மின் கட்டணத்தில் இருந்து 6 மாதத்திற்கு விலக்கு அளிக்க வேண்டும். அனைத்து அழகு நிலையங்களுக்கும் காப்பீடு வசதி செய்து தர வேண்டும். கடன் தவணைத்தொகையில் இருந்து 6 மாதத்திற்கு ஒத்தி வைப்பதோடு, அந்த வட்டியை தள்ளுபடி செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story