அவசர பயணத்திற்காக 3½ லட்சம் இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளன - மந்திரி அனில் தேஷ்முக் தகவல்
அவசர பயணத்துக்காக மராட்டியம் முழுவதும் இதுவரை 3 லட்சத்து 47 ஆயிரத்து 522 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்தார்.
மும்பை,
மராட்டியத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து போக்குவரத்து முற்றிலுமாக தடை செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் அவசர தேவைக்காக வெளிமாநிலங்களுக்கு அல்லது மராட்டியத்தின் உள் மாவட்டங்களுக்கு செல்ல விரும்புபவர்கள் போலீசாரிடம் விண்ணப்பித்து இ-பாஸ் அனுமதி சீட்டுகளை பெறலாம் என அரசு அறிவித்தது.
இதைத்தொடர்ந்து இ-பாஸ் கேட்டு லட்சக்கணக்கானோர் விண்ணப்பித்தனர். இவ்வாறு விண்ணப்பித்தவர்களில் 3 லட்சத்து 47 ஆயிரத்து 522 இ-பாஸ்கள் வழங்கப்பட்டுள்ளதாக உள்துறை மந்திரி அனில் தேஷ்முக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-
அபராதம்
ஊரடங்கு உத்தரவு அமலில் வந்த நாளில் இருந்து அரசின் உத்தரவை பின்பற்றாமல் நடந்து கொண்டதாக 1 லட்சத்து 5 ஆயிரத்து 532 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. இதுதொடர்பாக 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ஊரடங்கு காலத்தில் பல்வேறு வழக்குகளில் ரூ.4 கோடியே 5 லட்சம் அபராதமாக வசூலிக்கப்பட்டுள்ளது. மாநிலம் முழுவதும் போலீசார் மீது 214 தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன. இதில் 764 பேரை கைது செய்துள்ளோம்.
கொரோனாவுக்கு எதிரான போரை முன்னின்று நடத்தி வரும் 709 போலீஸ்காரர்கள் மற்றும் 84 போலீஸ் உயர் அதிகாரிகள் நோய் தொற்றுக்கு ஆளாகி உள்ளனர். இது தவிர மும்பையை சேர்ந்த 5 போலீசார் உள்பட மொத்தம் 8 பேர் கொரோனாவுக்கு பலியாகி உள்ளனர். மேலும் 2 லட்சத்து 97 ஆயிரத்து 282 பேர் தனிமைபடுத்தப்பட்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் தேவையற்ற வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் என்றும் கேட்டுக்கொண்டார்.
Related Tags :
Next Story