திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை எடுத்துச்செல்ல 3 சக்கர பேட்டரி வாகனங்கள்


திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை எடுத்துச்செல்ல 3 சக்கர பேட்டரி வாகனங்கள்
x
தினத்தந்தி 14 May 2020 5:04 AM IST (Updated: 14 May 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை எடுத்து செல்வதற்கு 3 சக்கர பேட்டரி வாகனங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு 245 வரவழைக்கப்பட்டுள்ளன.

தஞ்சாவூர், 

திடக்கழிவு மேலாண்மை திட்டத்தில் குப்பைகளை எடுத்து செல்வதற்கு 3 சக்கர பேட்டரி வாகனங்கள் தஞ்சை மாவட்டத்திற்கு 245 வரவழைக்கப்பட்டுள்ளன.

589 ஊராட்சிகள்

தஞ்சை மாவட்டத்தில் 14 ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இந்த ஒன்றியங்களில் 589 ஊராட்சிகள் உள்ளன. இந்த ஊராட்சிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் தூய்மை பணியாளர்கள் மூலம் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இதற்காக 3 சக்கர சைக்கிள்கள் மற்றும் தள்ளுவண்டிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இதனை தூய்மை பணியாளர்கள் தெரு, தெருவாக தள்ளிக்கொண்டு வீடுகளில் குப்பைகளை வாங்கி அதில் சேகரித்து கொண்டு கொட்டுவது வழக்கம். சைக்கிள் மற்றும் தள்ளு வண்டிகளாக இருந்ததால் இவற்றை தூய்மை பணியாளர்கள் எடுத்துச்சென்று குப்பைகளை சேகரிப்பதில் சிரமம் நிலவியது.

பேட்டரி வாகனங்கள்

இதையடுத்து திடக்கழிவு மேலாண்மை திட்டத்தின் கீழ் மின்கல வாகனங்கள்(பேட்டரியால் இயங்கும் 3 சக்கர மோட்டார் பொருத்திய வாகனம்) வழங்கப்பட்டு வருகிறது. அதன்படி தஞ்சை மாவட்டத்திற்கும் 245 பேட்டரி வாகனங்கள் வரவழைக்கப்பட்டுள்ளது. இந்த வாகனம் ஒன்றின் மதிப்பு ரூ.2 லட்சத்து 48 ஆயிரம் ஆகும். இதன் மொத்த மதிப்பு ரூ.6 கோடியே 7 லட்சத்து 60 ஆயிரம் ஆகும்.

அதன்படி தற்போது வாகனங்கள் ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்துக்கும் கோவையில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளன. லாரியில் வந்த இந்த வாகனங்கள் அனைத்தும் அந்தந்த ஒன்றிய அலுவலகங்களில் இறக்கி வைக்கப்பட்டு சரி செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த பணிகள் முடிந்ததும் அந்தந்த ஊராட்சிகளுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளன.

131 ஊராட்சிகள்

இது குறித்து தஞ்சை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் பழனி கூறுகையில், “தஞ்சை மாவட்டத்தில் உள்ள 14 ஒன்றியங்களில் உள்ள 131 ஊராட்சிகளுக்கு இந்த வாகனங்கள் வழங்கப்பட உள்ளன. ஏற்கனவே அனைத்து ஊராட்சிகளுக்கும் குப்பை அள்ளும் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

தற்போது பேட்டரியால் இயக்கப்படும் வாகனங்கள் வழங்குவதால் செலவு குறைவதோடு, கூடுதலாக இயக்குவதற்கான வாய்ப்புகள் உண்டு. இதில் சில வாகனங்கள் ஊரடங்குக்கு முன்னதாக வரவழைக்கப்பட்டு சில ஊராட்சிகளுக்கு வழங்கப்பட்டு விட்டது. தற்போது ஊரடங்கு தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளதால் வாகனங்கள் வந்துள்ளன” என்றார்.

Next Story