என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கு ஜூலை 30, 31-ந்தேதிகளில் பொது நுழைவுத்தேர்வு - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு


என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கு ஜூலை 30, 31-ந்தேதிகளில் பொது நுழைவுத்தேர்வு - துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவிப்பு
x
தினத்தந்தி 14 May 2020 5:30 AM IST (Updated: 14 May 2020 5:30 AM IST)
t-max-icont-min-icon

என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கு ஜூலை 30 மற்றும் 31-ந்தேதிகளில் பொது நுழைவுத்தேர்வு நடைபெறும் என்று துணை முதல்-மந்திரி அஸ்வத் நாராயண் அறிவித்து உள்ளார்.

பெங்களூரு, 

கர்நாடக துணை முதல்- மந்திரி அஸ்வத் நாராயண் பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

கர்நாடகத்தில் பி.யூ.கல்லூரி 2-ம் ஆண்டு தேர்வுகள் நடந்து முடிந்து உள்ளன. இன்னும் ஒரு பாடத்திற்கான தேர்வு மட்டும் பாக்கி உள்ளது. அந்த தேர்வை விரைவாக நடத்துவோம். என்ஜினீயரிங் உள்பட தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வு வருகிற ஜூலை மாதம் 30, 31-ந் தேதிகளில் நடத்த முடிவு செய்யப்பட்டு உள்ளது.

கல்லூரிகளுக்கு செப்டம்பர் முதல் வாரம் கல்வி ஆண்டு தொடங்கும். கல்லூரி மாணவர்களுக்கு நடத்த வேண்டிய பாக்கி பாடங்களை வருகிற 31-ந் தேதிக்குள் நடத்தி முடிக்கும்படி உத்தரவிட்டு உள்ளேன். ஆன்லைனில் பாடம் நடத்தும் பணியை கடந்த ஏப்ரல் மாதம் 20-ந் தேதி தொடங்கினோம். இதுவரை 1.69 லட்சம் மாணவர்கள் அதன் பயனை பெற்றுள்ளனர்.

கற்பித்தல் வகுப்புகள்

இதுவரை 55 ஆயிரம் பேர் பாடம் நடத்த பயன்படுத்தப்படும் செயலியை பதிவிறக்கம் செய்துள்ளனர். இதனால் நாங்கள் மேற்கொண்ட முயற்சிக்கு பலன் கிடைத்துள்ளது. நாட்டிலேயே முதல் முறையாக கர்நாடகத்தில் தான் ஆன்லைன் மூலம் மாணவர்களுக்கு கற்பித்தல் வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

கிராமப்புறங்களில் இணையதள பிரச்சினை இருப்பதாக புகார் வந்துள்ளது. அதனால் இணையதள வசதி இல்லாத நிலையிலும் கற்பித்தலுக்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளது. இணையதள வேகம் குறைவாக இருக்கும்போதும், கற்பித்தல் வீடியோ இயங்குமாறு செய்துள்ளோம். எங்களுடைய தொழில்நுட்ப குழு, அவ்வப்போது எழும் கோளாறுகளை சரிசெய்கிறது.

செல்போன் செயலி

கூகுல் பார்வையில் எங்களின் இந்த கற்பித்தல் செயலிக்கு 4 நட்சத்திர அந்தஸ்து வழங்கப்பட்டு உள்ளது. இது பெருமை அளிப்பதாக உள்ளது. இந்த ஆன்லைன் கற்பித்தலில் பொது நுழைவுத்தேர்வு, மருத்துவ நுழைவுத்தேர்வுக்கு தேவைப்படும் பயிற்சி வீடியோக்கள் உள்ளன. இதற்கான பயிற்சி வகுப்புகள் தொடங்கிவிட்டன. இதுவரை 1 லட்சத்து 70 ஆயிரத்து 510 பேர் இந்த இணையதள பக்கத்தை பார்த்துள்ளனர்.

இதில் 77 ஆயிரத்து 983 மாணவர்கள் தங்களை பதிவு செய்து கொண்டுள்ளனர். 38 ஆயிரம் மாணவர்கள் செல்போன் செயலி மூலம் பதிவு செய்துள்ளனர். மாணவர்களுக்கு மேலும் உதவும் வகையில் ஒரு உதவி மையத்தையும் தொடங்கியுள்ளோம். தொழிற்படிப்புகளுக்கான பொது நுழைவுத்தேர்வை நடத்த தேவையான அனைத்து ஏற்பாடுகளையும் செய்துள்ளோம். இந்த தேர்வை எழுதும் மாணவர்களுக்காக ஆன்லைனில் பயிற்சி வகுப்புகளை தொடங்கியுள்ளோம்.

முன்எச்சரிக்கை நடவடிக்கைகள்

கொரோனா பரவும் சூழ்நிலையில் தேவையான முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளோம். தேர்வு எழுத வரும் மாணவர்கள் முகக்கவசம் அணிவது, தனிமனித இடைவெளியை பின்பற்றுவது, சானிடைசர் திரவத்தை பயன்படுத்துவது போன்றவற்றை கட்டாயப்படுத்த உள்ளோம். தேர்வு அறைகளில் மாணவர்களின் எண்ணிக்கை குறைக்கப்படும். அதே வேளையில் தேர்வு மையங்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். அதனால் மாணவர்கள் ஆதங்கப்பட தேவை இல்லை.

பொது நுழைவுத்தேர்வு மூலம் கர்நாடகத்தில் என்ஜினீயரிங் கல்லூரிகளில் 40 ஆயிரம் இடங்கள் நிரப்பப்படும். இதில் இடங்களை மறைத்து முறைகேடு செய்வது போன்ற விஷயங்களை தடுக்க தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மருத்துவ இடங்களில் நடைபெறும் முறைகேடுகளையும் தடுக்க கடுமையான நடவடிக்கைகளை எடுக்க உள்ளோம். இது தொடர்பாக அரசு அமைத்த குழு, அறிக்கை வழங்கியுள்ளது.

கொரோனா நெருக்கடி

என்ஜினீயரிங் கல்லூரிகளில் கல்வி கட்டணத்தை உயர்த்த வேண்டும் என்ற கோரிக்கை வந்துள்ளது. இதுகுறித்து அரசு இன்னும் முடிவு செய்யவில்லை. கொரோனா நெருக்கடி ஏற்பட்டுள்ளதால், இந்த விஷயத்தில் அரசு மிகுந்த ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கும்.

இவ்வாறு அஸ்வத் நாராயண் கூறினார்.

Next Story