சிறுதொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி: முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்பு
சிறுதொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கோடி அறிவிப்புக்கு முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்பு தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,
மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன், நேற்று சிறுதொழில் துறைக்கு ரூ.3 லட்சம் கோடிக்கு பல்வேறு உதவி திட்டங்களை அறிவித்துள்ளார். இதை முதல்-மந்திரி எடியூரப்பா வரவேற்று அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் எடியூரப்பா கூறியிருப்பதாவது:-
கொரோனாவை தடுக்க ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், தொழில்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அனைத்து தரப்பினருக்கும் உதவ ரூ.20 லட்சம் கோடிக்கு தொகுப்பு திட்டத்தை பிரதமர் மோடி நேற்று முன்தினம் அறிவித்தார். இந்த நிலையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ரூ.3 லட்சம் கோடிக்கு சிறுதொழில் துறைக்கு பல்வேறு உதவிகளை அறிவித்துள்ளார். இது குறு, சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு பெரும் பயனுள்ளதாக இருக்கும்.
தொழிலாளர்களை ஊக்குவிக்கும்
சிறுதொழில் நிறுவன உரிமையாளர்கள் மற்றும் தொழிலாளர்கள் பொருளாதார ரீதியாக மீண்டு வர இது ஒரு வரப்பிரசாதமாக அமையும். இந்த உதவியை சரியான நேரத்திற்கு மத்திய அரசு வழங்கியுள்ளது. சிறுதொழில் நிறுவனங்களுக்கு எந்த உத்தரவாதமும் இல்லாமல் வங்கிக்கடன் வழங்கும் முடிவு, பெரும் உதவியாக இருக்கும். இது ஆலோசித்து அறிவியல் பூர்வமாக எடுக்கப்பட்ட முடிவாக உள்ளது.
இந்த முடிவு 45 லட்சம் சிறுதொழில் நிறுவனங்களுக்கு உதவும். அத்துடன் மாநிலங்களின் மின் வினியோக நிறுவனங்களுக்கு ரூ.90 ஆயிரம் கோடி உதவி, வருமான வரி விலக்கு, ரூ.50 ஆயிரம் கோடியை திரும்ப வழங்குதல், வருங்கால வைப்பு நிதி நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் சார்பில் ரூ.6,750 கோடி செலுத்துதல், வங்கி அல்லாத நிதி நிறுவனங்களுக்கு ரூ.30 ஆயிரம் கோடி உதவி வழங்குதல் போன்ற முடிவுகள் தொழில்துறை மற்றும் தொழிலாளர்களை ஊக்குவிக்கும்.
துணிச்சலான முடிவு
ரூ.200 கோடி வரையிலான திட்ட டெண்டர்களில் இந்திய நிறுவனங்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கும் முடிவு வரவேற்கத்தக்கது. கொரோனாவால் பாதிக்கப்பட்ட எந்த நாடும் இந்த அளவுக்கு தொழில் துறை மறுவாழ்வுக்கு உதவி திட்டங்களை அறிவிக்கவில்லை. மக்களை வேலைக்கு செல்ல ஊக்குவிக்கும் விதத்தில் இது துணிச்சலான முடிவு.
இவ்வாறு எடியூரப்பா தெரிவித்துள்ளார்.
Related Tags :
Next Story