50 நாட்களுக்கு பிறகு நாகையில் கடைகள் திறப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி


50 நாட்களுக்கு பிறகு நாகையில் கடைகள் திறப்பு வியாபாரிகள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 May 2020 6:24 AM IST (Updated: 14 May 2020 6:24 AM IST)
t-max-icont-min-icon

கொரோனா ஊரடங்கு காரணமாக நாகையில் கடைகள் 50 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

நாகப்பட்டினம், 

கொரோனா ஊரடங்கு காரணமாக நாகையில் கடைகள் 50 நாட்களுக்கு பிறகு நேற்று திறக்கப்பட்டது. இதனால் வியாபாரிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

தடுப்புகள் அகற்றம்

நாகை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க மாவட்ட நிர்வாகம் சார்பில் பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்தநிலையில் நாகை மாவட்டத்தில் 45 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டது. அதைத்தொடர்ந்து நாகை நகராட்சி எல்லைக்கு உட்பட்ட யாகூசைன் பள்ளி தெரு, நூல் கடைத்தெரு, பண்டகசாலை உள்ளிட்ட பகுதிகளில் பொதுமக்கள் யாரும் உள்ளே செல்ல முடியாத அளவிற்கு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அமைக்கப்பட்டு சீல் வைக்கப்பட்டது. இதனால் கடைவீதியில் உள்ள எல்லா கடைகளும் அடைக்கப்பட்டன.

வியாபாரிகள் மகிழ்ச்சி

இந்தநிலையில் கொரோனா தொற்று ஏற்பட்ட 44 பேர் குணமடைந்து வீடு திரும்பினர். இதையொட்டி நேற்றுமுன்தினம் இரவு மாவட்ட நிர்வாகம் சார்பில் தடுப்புகள் அகற்றப்பட்டன. இதையடுத்து கடைவீதியில் உள்ள அனைத்து கடைகளும் நேற்று திறக்கப்பட்டது. கடைகள் திறக்கப்பட்டதால் பொதுமக்கள் ஆர்வமுடன் வந்து தங்களுக்கு தேவையான பொருட்களை வாங்கி சென்றனர். இதனால் கடைவீதியில் மக்கள் நடமாட்டம் அதிகமானது. கடந்த 50 நாட்களுக்கு பின்னர் நாகை கடைத்தெரு நேற்று திறக்கப்பட்டதால் நாகை பகுதி மக்கள், வியாபாரிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Next Story