44 நாட்களுக்கு பிறகு டென்னிசன் தெரு பகுதியில் தடை நீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி


44 நாட்களுக்கு பிறகு டென்னிசன் தெரு பகுதியில் தடை நீக்கம் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி
x
தினத்தந்தி 14 May 2020 8:26 AM IST (Updated: 14 May 2020 8:26 AM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவில் டென்னிசன் தெரு பகுதிக்கு 44 நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டது. இதனால் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் டென்னிசன் தெரு பகுதிக்கு 44 நாட்களுக்கு பிறகு தடை நீக்கப்பட்டது. இதனால் இயல்பு நிலைக்கு திரும்பியதால் மக்கள் மகிழ்ச்சி அடைந்தனர்.

டென்னிசன் தெரு

குமரி மாவட்டத்தில் முதன் முதலில் கொரோனா பாதிக் கப்பட்டவர்களில் நாகர்கோவில் டென்னிசன் தெரு பகுதியைச் சேர்ந்தவரும் ஒருவர். இதனால் அந்த பகுதி கடந்த மார்ச் மாதம் 30-ந் தேதி முதல் தடை செய்யப்பட்ட பகுதியாக அறிவிக்கப்பட்டது. மேலும் டென்னிசன் தெருவின் ஒருபுறம், அதாவது டென்னிசன் சாலையில் ஒரு தடுப்பும், மற்றொரு முனைப்பகுதியான டிஸ்டில்லரி ரோடு பகுதியில் ஒரு தடுப்பும் என இரு பகுதிகளிலும் தடுப்பு அமைக்கப்பட்டு இருந்தது.

இதனால் அந்த தெருவில் உள்ள சுமார் 50 குடும்பத்தினர் வெளியே செல்ல முடியாமலும், வெளியில் உள்ளவர்கள் அந்த பகுதிக்குள் நுழைய முடியாத வகையிலும் தடை ஏற்படுத்தப்பட்டிருந்தது. இதற்கிடையே கொரோனாவால் பாதிக்கப்பட்ட நபர் ஆசாரிபள்ளம் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வீடு திரும்பினார்.

தடை நீக்கம்

இந்த நிலையில் வீட்டுக்கு வந்து 14 நாட்கள் ஆன நிலையில் அவருக்கு மீண்டும் கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் அவருக்கு கொரோனா தொற்று இல்லை என்று உறுதி செய்யப்பட்டது.

இதையடுத்து டென்னிசன் தெருவில் இருந்த தடையை அகற்ற அதிகாரிகள் முடிவு செய்தனர். அதன்படி 44 நாட்களுக்கு பிறகு நேற்று காலை டென்னிசன் தெருவின் இரு பகுதிகளிலும் பேரிகார்டுகளால் ஆன தடுப்புகளும், வீடுகள் மற்றும் தெருப் பகுதிகளில் ஒட்டப்பட்டு இருந்த தடை செய்யப்பட்ட பகுதி என அறிவிக்கும் வகையில் ஒட்டப்பட்டு இருந்த ஸ்டிக்கர்களும் அகற்றப்பட்டன.

நன்றி தெரிவித்தனர்

இதனால் அப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தனர். மேலும் தடை செய்யப்பட்டு இருந்த நாட்களில் தங்களுக்கு வேண்டிய உதவிகளைச் செய்து, சிறப்பாக பணியாற்றிய மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், நகர்நல அதிகாரி கிங்சால், சுகாதார ஆய்வாளர் பகவதியப்பன்பிள்ளை மற்றும் டாக்டர்கள், நர்சுகள், தூய்மை பணியாளர்கள், வடசேரி இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் ஆகியோரை பொதுமக்கள் பாராட்டி சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.இதையடுத்து டென்னிசன் தெரு பகுதி மக்கள் நேற்று முதல் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பினர். ஆர்வமுடன் கடைகளுக்கு சென்று தாங்களாகவே காய்கறி உள்ளிட்ட பொருட்களை வாங்கி மகிழ்ந்ததை காண முடிந்தது.

Next Story