பொள்ளாச்சி அருகே, பழைய வாகன குடோனில் தீ விபத்து - ரூ.1 லட்சம் பொருட்கள் சேதம்
பொள்ளாச்சி அருகே பழைய வாகன குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. அதில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதம் அடைந்தது.
பொள்ளாச்சி,
பொள்ளாச்சி குமரன் நகரை சேர்ந்தவர் ஜெயக்குமார். இவருக்கு சொந்தமான பழைய இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்கள் உடைக்கும் குடோன் நல்லூரில் உள்ளது. இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வேலை முடிந்ததும் வழக்கம் போல் குடோனை பூட்டி விட்டு ஜெயக்குமார் வீட்டிற்கு சென்று விட்டார்.
இதற்கிடையில் குடோனுக்கு முன்புறம் கொட்டி வைக்கப்பட்டு இருந்த பழைய பிளாஸ்டிக் பொருட்கள் மீது நேற்று எதிர்பாராதவிதமாக தீப்பிடித்ததாக தெரிகிறது. இந்த தீ வேகமாக அருகில் பழைய வாகனங்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த குடோனுக்கு பரவியது. இதில் அங்கு நிறுத்தப்பட்டு இருந்த வாகனங்கள் தீப்பிடித்து எரிய தொடங்கியது.
இதுகுறித்து பொள்ளாச்சி தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இந்த தகவலையடுத்து நிலைய அலுவலர் புருஷோத்தமன் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்றனர். தீயணைப்பு துறைக்கு சொந்தமான பெரிய, சிறிய வாகனங்கள் மூலம் தீயை அணைக்கும் பணி மும்முரமாக நடைபெற்றது. இதற்கிடையில் தனியார் லாரிகளில் தண்ணீர் கொண்டு வரப்பட்டது.
சுமார் 3 மணி போராடி தீயணைப்பு துறையினர் தீயை அணைத்தனர். இந்த தீ விபத்தில் ரூ.1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் சேதமானதாக போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதுகுறித்து பொள்ளாச்சி தாலுகா போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குப்பைகளுக்கு தீ வைத்ததால் தீ விபத்து ஏற்பட்டதா? அல்லது மின் கசிவு காரணமா? என்ற கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story