ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: சாலை சீரமைப்பு, கட்டுமான பணிகள் மும்முரம்


ஊரடங்கு கட்டுப்பாடுகள் தளர்வு: சாலை சீரமைப்பு, கட்டுமான பணிகள் மும்முரம்
x
தினத்தந்தி 14 May 2020 4:00 AM IST (Updated: 14 May 2020 9:23 AM IST)
t-max-icont-min-icon

ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டதால் சாலை சீரமைப்பு, கட்டுமான பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.

ஊட்டி,

கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க ஊரடங்கு உத்தரவு நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனால் கடந்த மார்ச் மாதம் 25-ந் தேதி முதல் கட்டுமான பொருட்களை விற்கும் கடைகள் அடைக்கப்பட்டன. சமவெளி பகுதிகளில் இருந்து மணல், ஜல்லி, செங்கல் கொண்டு வர லாரிகள் அனுமதிக்கப்படவில்லை. அதனால் மலை மாவட்டமான நீலகிரியில் அரசு கட்டிடங்கள் உள்பட அனைத்து கட்டுமான பணிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டது.

மேலும் சாலையை அகலப்படுத்துவது, சீரமைப்பது, தடுப்புச்சுவர் கட்டும் பணிகள் பாதியிலேயே நிறுத்தப்பட்டன. ஊட்டியில் அவ்வப்போது மழை பெய்து வந்ததால் தடுப்புச்சுவர் கட்டப்பட்ட இடங்களில் மண்சரிவு ஏற்பட்டது. இதனால் தடுப்புச்சுவர் பெயர்ந்து விழும் அபாயம் இருந்தது. இந்த நிலையில் நீலகிரி மாவட்டத்தில் கொரோனா வைரஸ் அறிகுறி தென்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு உள்ள 3 பகுதிகளை தவிர, பிற பகுதிகளில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வு செய்யப்பட்டது.

அனைத்து பகுதிகளிலும் கட்டிட பணிகளை மேற்கொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டது. அரசு அனுமதித்த கட்டுமான பொருட்கள் விற்கும் கடைகள் திறக்கப்பட்டு உள்ளது. அதனை தொடர்ந்து நீலகிரியில் பல்வேறு இடங்களில் பாதியிலேயே நிறுத்தி வைக்கப்பட்ட சாலை சீரமைப்பு பணிகள் தொடங்கி உள்ளது. ஊட்டி எட்டின்ஸ் சாலையில் அடைப்பு ஏற்பட்ட சாக்கடை கால்வாயை அகலப்படுத்தி கான்கிரீட் போடும் பணி நடந்து வருகிறது.

மணிக்கூண்டு பகுதியில் பார்சன்ஸ்வேலி 3-ம் குடிநீர் திட்டத்துக்காக குழாய்கள் பதிக்கும் போது சாலையோரத்தில் குழி தோண்டப்பட்டது. இதனால் மழைநீர் செல்ல முடியாமல் தேங்கி கிடந்தது. தற்போது மண்ணை அகற்றி சாலை சீரமைப்பு பணி நடைபெற்று வருகிறது. வடமாநில தொழிலாளர்கள் முகக்கவசம் அணிந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மரவியல் பூங்கா அருகே நிறுத்தப்பட்ட இன்டர்லாக் கற்கள் பதிக்கும் பணி முடியும் தருவாயில் உள்ளது. அதேபோல் கட்டுமான பணிகள் நடந்து வருகின்றன. ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மேற்கண்ட பணிகள் தொடங்கி மும்முரமாக நடைபெற்று வருகிறது.

Next Story