விலை வீழ்ச்சி: கால்நடைகளுக்கு தீவனமாகும் கேரட்டுகள் - விவசாயிகள் வேதனை
விலை வீழ்ச்சியால் நீலகிரியில் கேரட்டுகள் கால்நடைகளுக்கு தீவனமாகின்றன. இதனால் விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
ஊட்டி,
மலை மாவட்டமான நீலகிரியில் கேரட், பீட்ரூட், முட்டைக்கோஸ், முள்ளங்கி, பீன்ஸ், உருளைக்கிழங்கு, டர்னீப் போன்ற காய்கறிகள் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது. இதில் அதிக ஹெக்டேர் பரப்பளவில் கேரட் பயிரிடப்படுகிறது. இங்கு அறுவடை செய்யப்படும் காய்கறிகள் கோவை, திருச்சி, மதுரை, சென்னை உள்ளிட்ட வெளிமாவட்டங்கள் மற்றும் கேரளா, கர்நாடகா மாநிலங்களுக்கும் விற்பனைக்காக லாரிகளில் கொண்டு செல்லப்படுகிறது. கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்த ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டு உள்ளது.
இதனால் வெளியிடங்களுக்கு காய்கறிகள் ஏற்றுமதி குறைந்து இருக்கிறது. இந்த நிலையில் விவசாயிகளிடம் ஒரு கிலோ கேரட் ரூ.10 முதல் ரூ.15 வரை மட்டுமே மொத்த வியாபாரிகள் வாங்குகின்றனர். முள்ளங்கி, முட்டைக்கோஸ், பீன்ஸ் விலை குறைந்து உள்ளது. காய்கறிகளுக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டு உள்ளதால், விவசாயிகள் விளைந்த காய்கறிகளை அறுவடை செய்யாமல் விட்டு வந்தனர். சிலர் அறுவடை செய்து விட்டு மற்ற பயிர் சாகுபடியில் களம் இறங்கினர்.
இதற்கிடையே சென்னை கோயம்பேடு மார்க்கெட் சென்று வந்தவர்களில், லாரி டிரைவர்கள் 4 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இதனால் மற்ற டிரைவர்கள் வெளியிடங்களுக்கு காய்கறிகளை ஏற்றி செல்ல தயக்கம் காட்டுகின்றனர். மேலும் வெளியிடங்களுக்கு சென்று வந்த லாரி டிரைவர்கள் வீடுகளில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். அதனால் ஊட்டியில் இருந்து குறைந்த சரக்கு வாகனங்கள் மட்டுமே வெளியிடங்களுக்கு சென்று வருகிறது.
இந்த நிலையில் ஊட்டி சுற்றுப்புற பகுதிகளில் அறுவடை செய்த கேரட்டுகளுக்கு உரிய விலை கிடைக்காததாலும், சந்தைப்படுத்த வெளியிடங்களுக்கு சரக்கு வாகனங்களில் கொண்டு செல்ல முடியாததாலும் சாலை மற்றும் கால்வாய் ஓரங்களில் வீணாக கொட்டப்பட்டு வருகிறது. ஊட்டி அருகே கேத்தி பாலாடாவில் வீணாக கொட்டப்பட்ட கேரட்டுகளை கால்நடைகள் கூட்டமாக வந்து தீவனமாக உட்கொள்கின்றன. இதனால் பல லட்சம் ரூபாய் நஷ்டம் ஏற்பட்டு விவசாயிகள் வேதனை அடைந்து உள்ளனர்.
இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது:-
ஊரடங்கு உத்தரவுக்கு முன்பு ஒரு கிலோ கேரட் ரூ.60-க்கு விற்பனையானது. இதனால் ஓரளவு லாபம் கிடைத்து வந்தது. தற்போது வெளியிடங்களுக்கு செல்லும் சரக்கு வாகனங்களுக்கு அதிக வாடகை தொகை செலுத்தி காய்கறிகளை விற்பனை செய்ய முடியாத நிலை உள்ளது. மொத்த வியாபாரிகள் குறைந்த விலைக்கு வாங்கி அதிக விலைக்கு விற்பனை செய்கின்றனர். விவசாயிகளால் நேரடியாக விற்பனை செய்ய இயலாததாலும், விலை வீழ்ச்சியாலும் வீணாக கொட்டி வருகிறோம். நீலகிரி விவசாயிகளுக்கு அரசு உதவ முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
Related Tags :
Next Story