ஊரடங்கு தளர்வால் திருச்சி கடைவீதியில் திறக்கப்பட்ட ஜவுளி கடைகள் மூடல் போலீசார் நடவடிக்கை
ஊரடங்கு உத்தரவு தளர்வையொட்டி திருச்சி கடைவீதியில் திறக்கப்பட்ட ஜவுளி, ரெடிமேட் ஆடை விற்பனை கடைகள் போலீசார் எடுத்த நடவடிக்கையால் மூடப்பட்டன.
மலைக்கோட்டை,
ஊரடங்கு உத்தரவு தளர்வையொட்டி திருச்சி கடைவீதியில் திறக்கப்பட்ட ஜவுளி, ரெடிமேட் ஆடை விற்பனை கடைகள் போலீசார் எடுத்த நடவடிக்கையால் மூடப்பட்டன.
அலைமோதிய கூட்டம்
கொரோனா வைரஸ் பரவலை தடுப்பதற்காக பிறப்பிக்கப்பட்டு இருந்த ஊரடங்கு உத்தரவில் கடந்த 11-ந்தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டன. இதன்படி தமிழகத்தில் டீக்கடைகள், பெட்டிக்கடைகள், பர்னிச்சர் கடைகள், டி.வி மற்றும் வீட்டு உபயோக பொருட்கள் விற்பனை செய்யும் நிறுவனங்கள், குளிர்சாதன வசதி செய்யப்படாத நகை கடைகள், ஜவுளி கடைகள் திறக்கப்பட்டன. திருச்சி மலைக்கோட்டை பகுதி, பெரிய கடைவீதி, என்.எஸ்.பி. சாலை, சிங்கார தோப்பு, சூப்பர் பஜார் ஆகிய இடங்களில் ஜவுளி கடைகள் மற்றும் ரெடிமேட் ஆடைகள் விற்பனை செய்யும் கடைகள் திறக்கப்பட்டு இருந்ததால் 11-ந்தேதியும், 12-ந்தேதியும் இந்த கடைகளில் மக்கள் கூட்டம் அலைமோதியது. 40 நாட்களுக்கு பின்னர் கடைகள் திறக்கப்பட்டதால் மக்கள் ஜவுளி எடுப்பதிலும், குழந்தைகளுக்கு தேவையான ரெடிமேட் ஆடைகளை வாங்குவதிலும் பொதுமக்கள் அதிக ஆர்வம் காட்டினார்கள்.
மூடப்பட்டன
சமூக இடைவெளியை பின்பற்றாமல் அவர்கள் கடைகளில் கூடியதாலும், முக கவசம் அணியாமல் வந்ததாலும், மற்றும் வாகனங்களில் வந்து குவிந்ததாலும் கடைவீதியில் அவ்வப்போது போக்குவரத்து நெருக்கடியும் ஏற்பட்டது. இதனால் கொரோனா வைரஸ் பரவி விடுமோ என்ற அச்சமும் மக்களிடம் ஏற்பட்டது. நேற்றும் காலையில் வழக்கம்போல் இந்த கடைகள் திறக்கப்பட்டு இருந்தன.
இந்நிலையில் கோட்டை போலீசார் இன்ஸ்பெக்டர் சண்முகவேல் தலைமையில் திடீர் என அங்கு வந்தனர். அவர்கள் ஊரகப்பகுதிகளில் தான் ஜவுளி கடைகள் திறப்பதற்கு ஊரடங்கில் இருந்து தளர்வு வழங்கப்பட்டு உள்ளது. நகர பகுதிகளில் கடைகளை திறப்பது பற்றி இதுவரை தெளிவான உத்தரவு எதுவும் வரவில்லை. எனவே கடைகளை நீங்களாகவே மூடி விடுங்கள் என கூறினார்கள். இதனை தொடர்ந்து திறந்து வைக்கப்பட்டு இருந்த அனைத்து கடைகளும் உடனடியாக அடைக்கப்பட்டன. நகை கடைகள் மட்டும் திறந்து இருந்தன.
Related Tags :
Next Story