சேலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்


சேலத்தில் சமூக இடைவெளியை கடைபிடிக்காத மக்கள்
x
தினத்தந்தி 14 May 2020 10:49 AM IST (Updated: 14 May 2020 10:49 AM IST)
t-max-icont-min-icon

சேலத்தில் சமூக இடைவெளியை பொதுமக்கள் கடைபிடிக்காத சூழலால் கொரோனா வைரஸ் பரவும் அபாயம் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.

சேலம்,

சேலம் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பு நடவடிக்கையில் மாநகராட்சி நிர்வாகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது. ஊரடங்கு உத்தரவு அமலில் இருந்தாலும் பெரும்பாலான கடைகளை திறக்க தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. இதனால் சேலம் மாநகரில் பல்வேறு இடங்களில் பெரும்பாலான கடைகள் திறக்கப் பட்டுள்ளன.

குறிப்பாக நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்களை கொரோனா வைரஸ் தாக்கும் அபாயம் இருப்பதாகவும், அதனை கட்டுப்படுத்த நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்க கூடிய ஓமியோதிபதி மாத்திரைகளையும், கபசுர குடிநீரை பயன்படுத்துமாறும் அரசு அறிவுறுத்தி உள்ளது. இதனால் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கபசுர குடிநீர் மற்றும் நிலவேம்பு கசாய பொடிகளை வாங்க பொதுமக்கள் அதிக அளவில் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

நாட்டு மருந்துக்கடைகள்

அதேநேரத்தில் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு செல்ல முடியாத பொதுமக்கள், சின்னக்கடை வீதியில் உள்ள நாட்டு மருந்துக்கடைகளில் நிலவேம்பு கசாயம் மற்றும் கபசுர குடிநீர் பொடிகளை வாங்கி செல்கிறார்கள். கடந்த 45 நாட்களாக நாட்டு மருந்துக் கடைகள் அதிகமாக உள்ள சின்னக்கடை வீதியில் எந்தவித கடைகளும் திறக்கப்படவில்லை. ஆனால் தற்போது சின்னக்கடை வீதியில் அனைத்து விதமான கடைகள் திறக்கப்பட்டு உள்ளதால் அங்குள்ள நாட்டு மருந்துக் கடைகளில் பொதுமக்களின் கூட்டம் தினமும் அதிகமாக இருந்து வருகிறது. குறிப்பாக அந்த கடைகளுக்கு வரும் பொதுமக்கள் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் ஒருவருக்கொருவர் நெருக்கமாக நின்று கொண்டு நாட்டு மருந்துகளை வாங்கி செல்வதை காணமுடிகிறது.

சமூக இடைவெளி

இதேபோல் சேலம் நகரில் உள்ள சில ஏ.டி.எம். மையங்களிலும் பெண்கள் உள்பட அனைத்து தரப்பு மக்களும் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் வரிசையில் நின்று பணம் எடுத்து செல்வதையும் காணமுடிகிறது. கொரோனா வைரசை இன்னும் கட்டுப்படுத்த முடியாத சூழலில், பொதுமக்கள் அனைவரும் தனிநபர் இடைவெளியை கடைபிடிப்பது அவசியமாகும்.

எனவே, சின்னக்கடை வீதியில் உள்ள கடைகளை மாநகராட்சி அதிகாரிகள் அவ்வப்போது கண்காணிக்க வேண்டும் எனவும், அரசு உத்தரவை மீறி வியாபாரம் செய்யும் நாட்டு மருந்துக் கடைக்காரர்கள் மீதும், முக கவசம் அணியாமல் மற்றும் சமூக இடைவெளியை பொது இடங்களில் கடைபிடிக்காமல் செயல்படும் பொதுமக்கள் மீதும் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Next Story