சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வடமாநில தொழிலாளர்கள் திடீர் மறியல்


சொந்த ஊருக்கு அனுப்ப கோரிக்கை வடமாநில தொழிலாளர்கள் திடீர் மறியல்
x
தினத்தந்தி 14 May 2020 11:06 AM IST (Updated: 14 May 2020 11:06 AM IST)
t-max-icont-min-icon

மதுரை-நத்தம் 4 வழிச்சாலை பணியில் ஈடுபடும் தொழிலாளர்கள் தங்களை சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கக்கோரி திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

மதுரை, 

மதுரை தல்லாகுளத்தில் இருந்து நத்தம் செல்லும் சாலை 4 வழிச்சாலையாக மாற்றப்படுகிறது. இதில் தல்லாகுளத்தில் இருந்து ஊமச்சிகுளம் வரை பறக்கும் மேம்பாலம் அமைக்கப்பட்டு வருகிறது. இந்த பணியில் பீகார், மேற்கு வங்காளம் உள்ளிட்ட வடமாநிலங்களை சேர்ந்த 400-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை பார்த்து வருகிறார்கள். இவர்கள் அனைவரும் மதுரை ஊமச்சிகுளம் அருகே வீரபாண்டி கிராமத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவலை தடுக்க அரசு ஊரடங்கு பிறப்பித்தது. அதையொட்டி அவர்கள் அனைவரும் வேலையில்லாமல் இருந்து வந்தனர். இந்த நிலையில் ஊரடங்கில் அரசு சிலவற்றை தளர்த்தியதை தொடர்ந்து தங்களை ஊருக்கு அனுப்பி வைக்குமாறு வடமாநில தொழிலாளர்கள் நேற்று காலை திடீரென்று ஊமச்சிகுளம்-நத்தம் சாலையில் கூடி போராட்டம் நடத்தினார்கள். இந்த போராட்டத்தின் போது, தங்களுக்கு சரியான சாப்பாடு, தண்ணீர், சம்பளம் கொடுக்க மறுக்கிறார்கள். எனவே தங்களை சொந்த ஊருக்கு உடனே அனுப்பி வைக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தார்கள்.

தகவல் அறிந்ததும் ஊமச்சிகுளம் போலீசார் மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். அவர்கள் வடமாநில தொழிலாளர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி போராட்டத்தை கைவிடுமாறு தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். ஆனால் அவர்கள் தாங்கள் இருக்கும் இடத்தின் அருகே சாலையில் அமர்ந்து மறியலிலும் ஈடுபட்டனர்.

இதனால் ஊமச்சிகுளத்தில் இருந்து அலங்காநல்லூர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. தொடர்ந்து போலீசாரும், அதிகாரிகளும் அவர்களிடம் மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் ஒரு தரப்பினர் தங்களுக்கு சம்பளம், சாப்பாடு கொடுத்தால் இங்கேயே இருந்து வேலை பார்ப்பதாக தெரிவித்தனர். ஆனால் மற்றொரு தரப்பினர் தங்களை உடனடியாக சொந்த ஊருக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்று தெரிவித்தனர். உடனே அதிகாரிகள் இந்த கோரிக்கை குறித்து மாவட்ட நிர்வாகத்திடம் தெரிவித்து சொந்த ஊருக்கு செல்பவர்களை அனுப்பி வைக்க ஏற்பாடு செய்வதாக தெரிவித்தனர். அதை தொடர்ந்து அவர்கள் மறியலை கைவிட்டு தங்களின் இருப்பிடத்திற்கு சென்றனர். இந்த போராட்டத்தால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Next Story