விளைச்சல் இருந்தும் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலை
விளைச்சல் இருந்தும் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
கரூர்,
விளைச்சல் இருந்தும் வாழைத்தார்களை விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலையில் உள்ளனர்.
வாழைத்தார்கள்
கரூர் ரெயில் நிலையம் அருகே உள்ள வாழை மண்டிக்கு நாமக்கல் மாவட்டம் மோகனூர், காட்டுப்புத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும், கரூர் மாவட்டத்திற்கு உட்பட்ட லாலாப்பேட்டை, மாயனூர், கிருஷ்ணராயபுரம், வாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் பூவன், ரஸ்தாலி, கற்பூரவள்ளி உள்ளிட்ட வாழைத்தார்கள் விற்பனைக்காக கொண்டு வரப்படுகின்றன. ஈரோடு மாவட்டம் கோபி, வேலூர், தேனி, போடி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து செவ்வாழைத்தார்கள், மோரிஸ் வாழைத்தார்கள் கொண்டு வரப்படுகின்றன.
இவ்வாறு கொண்டு வரப்படும் வாழைத்தார்கள் நாள் தோறும் ஏலம் விடப்படும். இதில் மாவட்டம் முழுவதும் இருந்து வியாபாரிகள் கலந்து கொண்டு வாழைத்தார்களை வாங்கி செல்வார்கள். ஆனால் தற்போது கொரோனா வைரஸ் பரவலை தடுக்க ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்பட்டது, போக்குவரத்து வசதி இல்லாதது உள்ளிட்ட காரணங்களால் விளைச்சல் அதிகம் இருந்தும், விற்பனை செய்ய முடியாததால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
இழப்பீடு வழங்க வேண்டும்
இது குறித்து வாழை மண்டி வியாபாரிகள் கூறுகையில், தற்போது பூவன் வாழைத்தார் ரூ.200-க்கும், ரஸ்தாலி தார் ரூ.250 முதல் ரூ.300 வரையிலும், செவ்வாழை தார் ரூ.500 முதல் ரூ.600 வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது. தற்போது விளைச்சல் அதிகம் இருந்தும் போக்குவரத்து வசதி இல்லாததாலும், கோவில் திருவிழாக்கள் நடைபெறாதது, டீ கடைகள் அதிக அளவில் திறக்காதது, சந்தைகள் இயங்காதது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் விற்பனை குறைந்துள்ளது. இதனால் வாழைத்தார்களை வாங்க வியாபாரிகளும் அதிக அளவில் வருவது இல்லை, என்று கூறினர். இது குறித்து விவசாயிகள் கூறுகையில், விளைச்சல் அதிகம் இருந்தாலும் 20 சதவீத அளவில் மட்டுமே வியாபாரம் நடைபெறுவதால் லாபம் இல்லாத நிலை உள்ளது. எனவே வாழை விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும், என்றனர்.
Related Tags :
Next Story