புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயற்சி பெண் கைது
புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
புதுக்கோட்டை,
புதுக்கோட்டை அருகே தோசையில் விஷம் கலந்து கள்ளக்காதலனை கொல்ல முயன்ற பெண்ணை போலீசார் கைது செய்தனர்.
லாரி டிரைவர்
புதுக்கோட்டை அருகே மச்சுவாடி ராம்நகர் பகுதியை சேர்ந்தவர் கலைவாணி (வயது 29). இவரது கணவர் பிரிந்து சென்று விட்டார். கலைவாணிக்கு ஆலங்குடி அருகே முத்துப்பட்டினம் பகுதியை சேர்ந்த லாரி டிரைவரான ராஜதுரையுடன் (29) பழக்கம் ஏற்பட்டது. இவர்களது பழக்கம் கள்ளக்காதலாக மாறியது. திருமணம் செய்துகொள்ளாமல் இருவரும் ஒன்றாக சேர்ந்து வாழும் நிலை வரை சென்றது. கடந்த சில மாதங்களாக கலைவாணியுடன், ராஜதுரை குடும்பம் நடத்தி வந்தார்.
இந்த நிலையில் ராஜதுரை குடித்துவிட்டு வந்து கலைவாணியை அடிக்கடி கொடுமைப்படுத்தி உள்ளார். இதனால் கலைவாணி மிகுந்த மனவேதனை அடைந்தார்.
தோசையில் விஷம்
இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மது குடித்து விட்டு வந்த ராஜதுரை, கலைவாணியை அடித்து துன்புறுத்தி உள்ளார். இதனால் அவர் ஆத்திரமடைந்தார். இதையடுத்து அவரை கொலை செய்ய கலைவாணி திட்டமிட்டார். அன்றைய தினம் இரவு ராஜ துரைக்கு கலைவாணி தோசை சுட்டுக்கொடுத்துள்ளார்.
அப்போது தோசை மாவில் எலி பேஸ்ட்டை (விஷம்) கலந்துள்ளார். அதில் ஊற்றிக்கொடுத்த தோசையை ராஜதுரை சாப்பிட்டார். இதில் அவருக்கு தொடர்ந்து வாந்தி மற்றும் வயிற்று வலி ஏற்பட்டது.
கடந்த 2 நாட்களாக அவர் வாந்தி எடுத்தப்படி வீட்டில் இருந்துள்ளார். இந்த நிலையில் அவரை காண நண்பர்கள் வந்த போது ராஜதுரையை சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். இதையடுத்து அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
ஒப்புதல் வாக்குமூலம்
இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த கணேஷ்நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அழகம்மாள் மற்றும் போலீசார் விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் கலைவாணியிடம் விசாரித்த போது, தான் ராஜதுரையை கொல்ல முயன்றதாக ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். இதையடுத்து கலைவாணியை போலீசார் நேற்று முன்தினம் கைது செய்தனர். தொடர்ந்து போலீசார் விசாரித்து வருகின்றனர். தோசையில் விஷம் கலந்து கொடுத்து கள்ளக்காதலனை பெண் கொலை செய்ய முயன்ற சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Related Tags :
Next Story