அரியலூர் மாவட்டத்தில் கொரோனா சிகிச்சை பெற்ற 160 பேர் குணமடைந்தனர்
அரியலூர் மாவட்ட முகாம்களில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 160 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
அரியலூர்,
அரியலூர் மாவட்ட முகாம்களில் கொரோனா சிகிச்சை பெற்று வந்த 160 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பினர்.
கொரோனா தொற்று
அரியலூர் மாவட்டத்தில் முதல் கொரோனா வைரஸ் தொற்று ஒரு இளம்பெண்ணுக்கு ஏற்பட்டது. அதனை தொடர்ந்து டெல்லி நிஜாமுதீனில் நடைபெற்ற மாநாட்டில் கலந்து கொண்டு செந்துறை வந்தவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. அவர்களை தொடர்ந்து அவர்களிடம் தொடர்பில் இருந்தவர்கள் மற்றும் 108 ஊழியர்கள் என 11 பேருக்கு மட்டுமே கொரோனா தொற்று ஏற்பட்டு குறைவான எண்ணிக்கையில் அரியலூர் மாவட்டம் இருந்தது.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் 30-ந் தேதி கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து செந்துறை அருகே உள்ள நமங்குணம் கிராமத்திற்கு வந்த வாலிபர் ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் உஷாரான மாவட்ட நிர்வாகம் சோதனை சாவடியில் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு கோயம்பேடு மார்க்கெட்டில் இருந்து வந்தவர்களை முகாம்களில் தங்க வைத்து மருத்துவ பரிசோதனை மேற்கொண்டனர். இவர்களில் சுமார் 500 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொண்டதில் பெரும்பாலானவர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.
160 பேர் குணமடைந்தனர்
அதனை தொடர்ந்து அவர்கள் முகாம்களில் தங்க வைக்கப்பட்டு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவர்களில் அரியலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த 30 பேரும், அரியலூர் அரசு கலைக்கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 38 பேரும், ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிகிச்சை பெற்றுவந்த 64 பேரும், ஜெயங்கொண்டம் தனியார் கல்லூரியில் சிகிச்சை பெற்றுவந்த 28 பேரும் என மொத்தம் 160 கோயம்பேடு கூலி தொழிலாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் பூரண குணமடைந்து 108 ஆம்புலன்ஸ் மூலம் அவரவர் வீடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
ராயம்புரம் அரசு உயர்நிலைப்பள்ளியில் சிகிச்சை பெற்று குணமடைந்தவர்களை உடையார்பாளையம் கோட்டாட்சியர் பூங்கோதை, செந்துறை தாசில்தார் முத்துகிருஷ்ணன், வட்டார மருத்துவ அலுவலர் இந்துமதி, டாக்டர் ரேவதி உள்ளிட்டவர்கள் பழங்கள் கொடுத்து வாழ்த்து தெரிவித்து அனுப்பி வைத்தனர். மேலும் வீடுகளில் அவர்கள் 14 நாட்கள் தங்களை தனிமைப்படுத்திக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டது. அரியலூர் மாவட்டத்தில் மொத்தம் 243 பேர் குணமடைந்து வீடு திரும்பி உள்ளதாக மாவட்ட கலெக்டர் ரத்னா தகவல் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story