ராமநாதபுரத்தில் பரிதாபம்: கிறிஸ்தவ ஆலய சுவர் விழுந்து சிறுவன் பலி - மேலும் 2 பேர் காயம்


ராமநாதபுரத்தில் பரிதாபம்: கிறிஸ்தவ ஆலய சுவர் விழுந்து சிறுவன் பலி - மேலும் 2 பேர் காயம்
x
தினத்தந்தி 14 May 2020 1:04 PM IST (Updated: 14 May 2020 1:04 PM IST)
t-max-icont-min-icon

கிறிஸ்தவ ஆலய சுவர் விழுந்ததில் 5 வயது சிறுவன் பரிதாபமாக உயிரிழந்தான். இந்த சம்பவத்தில் மற்றொரு சிறுவன் உள்பட 2 பேர் படுகாயம் அடைந்தனர்.

ராமநாதபுரம்,

ராமநாதபுரம் எம்.எஸ்.கே.நகர் பகுதியில் கிறிஸ்தவ ஆலயம் உள்ளது. இங்கு நேற்று மாலை காந்திநகர் பகுதியை சேர்ந்்த சுரேஷ்குமார் மகன் ஜெப்ரி ரோகித் (வயது 5), முரளி மகன் மனீஷ் குமார் (10) ஆகியோர் விளையாடிக்கொண்டிருந்தனர். அப்போது ஆலயத்தில் வேலை பார்க்கும் களிமண்குண்டு பகுதியை சேர்ந்த கருப்பையா மகள் பிரிசில்லா (31) என்பவர் கியாஸ் சிலிண்டர் எடுக்க வந்துள்ளார்.

அவரின் பின்னால் மேற்கண்ட சிறுவர்கள் இருவரும் வந்துள்ளனர். அப்போது எதிர்பாராதவிதமாக ஆலயத்தின் சுற்றுச்சுவர் திடீரென இடிந்து விழுந்தது. அதன் இடிபாடுகளில் சிறுவன் ஜெப்ரி ரோகித், மனீஷ் குமார், பிரிசில்லா ஆகிய 3 பேரும் சிக்கிக்கொண்டனர். உடனே அக்கம்பக்கத்தில் உள்ளவர்கள் ஓடிவந்து அவர்களை மீட்டனர்.

ஆனால் இடிபாடுகளுக்குள் சிக்கிய ஜெப்ரி ரோகித் பரிதாபமாக இறந்துவிட்டான். பிரிசில்லா மற்றும் மனீஷ்குமார் ஆகியோர் படுகாயம் அடைந்தனர். அவர்களை ராமநாதபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக ராமநாதபுரம் நகர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். பலியான சிறுவனின் உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறியது பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Next Story