பச்சை மண்டலமாகும் என எதிர்பார்த்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா - மும்பையில் இருந்து வந்த பெண்ணுக்கு தொற்று


பச்சை மண்டலமாகும் என எதிர்பார்த்த நிலையில் சிவகங்கை மாவட்டத்தில் 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா - மும்பையில் இருந்து வந்த பெண்ணுக்கு தொற்று
x
தினத்தந்தி 14 May 2020 7:34 AM GMT (Updated: 14 May 2020 7:34 AM GMT)

சிவகங்கை மாவட்டம் பச்சை மண்டலமாகும் என எதிர்பார்த்த நிலையில் 22 நாட்களுக்கு பிறகு மீண்டும் கொரோனா பாதிப்பு தெரியவந்துள்ளது. அதாவது, மும்பையில் இருந்து வந்த பெண்ணுக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

காரைக்குடி, 

சிவகங்கை மாவட்டத்தில் 12 பேருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டு அவர்கள் அனைவரும் சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று குணம் அடைந்தனர். இந்த நிலையில் கடந்த 22 நாட்களாக சிவகங்கை மாவட்டம் கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் நேற்று காரைக்குடி ரெயில்வே பகுதி குட்ஷெட் தெருவைச் சேர்ந்த 27 வயது பெண் ஒருவருக்கு கொரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டது. இதையடுத்து அவர் சிகிச்சைக்காக சிவகங்கை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

மேலும் அந்த பெண் வசித்து வந்த பகுதியை சுகாதாரத்துறை அதிகாரிகள் சீல் வைத்து தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். விசாரணையில், கடந்த சில தினங்களுக்கு முன்பு மும்பையில் இருந்து காரைக்குடிக்கு 2 தனி பஸ்களில் 50 பேர் அழைத்து வரப்பட்டனர். அவர்களில் இந்த பெண்ணும் ஒருவர் ஆவார். இதையடுத்து மற்றவர்களையும் தனிமைப்படுத்தும் நடவடிக்கையில் சுகாதாரத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். கடந்த 22 நாட்களாக கொரோனா இல்லாத மாவட்டமாக இருந்து வந்த நிலையில் நேற்று காரைக்குடி பகுதியை சேர்ந்த பெண் ஒருவருக்கு கொரோனா உறுதியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story