அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு: வயிற்றில் ஈரத்துணியை கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்


அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயது உயர்வு: வயிற்றில் ஈரத்துணியை கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 14 May 2020 1:14 PM IST (Updated: 14 May 2020 1:14 PM IST)
t-max-icont-min-icon

அரசு ஊழியர்கள் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை கண்டித்து வயிற்றில் ஈரத்துணியை கட்டி ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல், 

தமிழகத்தில் அரசு ஊழியர்கள் ஓய்வுபெறும் வயதை 58-ல் இருந்து 59 ஆக உயர்த்தி அரசு உத்தரவிட்டது. இதனால் பல ஆயிரம் பேரின் பதவி உயர்வு மட்டுமின்றி இளைஞர்களின் வேலைவாய்ப்பும் பாதிக்கப்படுவதாக எதிர்ப்பு கிளம்பியது. எனவே, அந்த உத்தரவை திரும்ப பெற வேண்டும் என்று பல்வேறு தரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கத்தினர் திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகம் அருகே ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதற்கு மாவட்ட செயலாளர் பாலாஜி தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் விஷ்ணுவர்த்தன் முன்னிலை வகித்தார். மேலும் அரசு ஊழியர்களின் ஓய்வு பெறும் வயதை உயர்த்தியதை எதிர்க்கும் வகையில் வயிற்றில் ஈரத்துணியை கட்டியபடி ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது அரசின் உத்தரவை திரும்ப பெறும்படி வலியுறுத்தி கோஷமிட்டனர். இதையடுத்து ஊரடங்கு அமலில் இருக்கும் போது போராட்டம் நடத்தியதாக நிர்வாகிகள் 6 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

வேடசந்தூர் அருகே உள்ள பூத்தாம்பட்டி, நாகையகோட்டை ஆகிய பகுதிகளில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் கிளை நிர்வாகிகள் வினிதா, மோகன், தங்கப்பாண்டி, முருகேசன் ஆகியோர் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர்.

இதேபோல் குஜிலியம்பாறை ஊராட்சி ஒன்றிய அலுவலகம் முன்பு இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் இந்திய ஜனநாயக வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் பாலசந்திரபோஸ் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் வாயில் கருப்பு துணி கட்டியும், கையில் பதாகைகளை ஏந்தியும் கலந்து கொண்டனர்.

Next Story